சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாகக் காவல் உயர் அதிகாரிகளையும், காயமடைந்தவர்களையும் நேரில் பார்க்காமலேயே சிறையில் அடைக்க உதவிய மாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வலியுறுத்தி இருக்கிறது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 19.6.2020 அன்று நடந்த இரட்டைக்கொலை தொடர்பாக 4 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் போக்கைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தமிழ்நாடு என்ற பெயரில் அமைப்பொன்றைத் தொடங்கியுள்ளன. அந்த அமைப்பின் சார்பில் தலைவர் தியாகு, செயலாளர் மீ.த.பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பாக தமிழக அளவில் வணிகர்களும் பொதுமக்களும் கிளர்ந்தெழுந்து போராடியதாலும், அரசியல் கட்சிகள், மனிதவுரிமை அமைப்புகள் தொடர்ந்து எடுத்த முயற்சிகளாலும், முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்பட பலதரப்பட்ட குடிமக்களும் ஓங்கிக் குரல் கொடுத்தமையாலும், ஊடகங்கள் ஏற்றிய வெளிச்சத்தாலும், அனைத்திந்திய அளவிலும் அனைத்துலக அளவிலும் கூட நீதிக்கான குரல் எதிரொலித்தமையாலும் சாத்தான்குளம் நீதிக்கான போராட்டப் பயணத்தில் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளோம்.
.........................