Media



வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரான ஹென்றி திபேன் பேசுகையில், ''ஆளுநர் ரவி காவல்துறையில் பணியற்றியவர், கூடுதலாக ஆளுநர் என்ற பொறுப்பில் அவர் தற்போது இருப்பதால் தடை செய்யப்பட்ட பரிசோதனை நடைபெற்றுள்ளதை அறிந்திருந்தும் பல நாட்கள் மௌனம் காத்தது வியப்பளிக்கிறது,'' என்கிறார். குழந்தைகள் மீதான உரிமை மீறல் ஏற்பட்டிருந்தால், அதை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்றும் விதிமீறல்கள் நடைபெற்ற தகவல்கள் தெரிய வந்த பிறகு, ஆளுநரின் தலையீடு இருந்திருந்தால், அதுகுறித்து அவர் விளக்குவதுதான் சரியாக இருக்கும் என்றும் கூறுகிறார் ஹென்றி. ''ஆளுநர் ரவி பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதேபோல, இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது, இதை இவர் எப்படிக் கையாண்டார், யார் மூலமாகக் குழந்தைகளுக்கு நீதி கிடைக்க முயன்றார் என்ற தகவலைத் தருவதுதான் சிறந்தது,'' என்கிறார் அவர்.

இந்திய காவல் பணி அதிகாரிகள் சங்கத்திற்கு, மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், ஹென்றி திபேன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.






தாங்கள், கடந்த 04.04.2023 அன்று "திரு.பல்வீர்சிங் I.P.S., என்பவருக்கு எதிராக காவல் நிலைய சித்திரவதை குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீடியா டிரையல் (Media Trial) நடக்கின்றது" என்ற தலைப்பில், பொதுநல நோக்குடன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தீர்கள். அந்த அறிக்கையை இன்னாருக்குத் தான் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல் "அன்பான எல்லோருக்கும்" என்று விளித்து வெளியிட்டிருந்தீர்கள். ஆகவே தாங்கள் அந்த அறிக்கையை எங்களுக்கும் சொன்னதாகக் கொண்டு, தற்போது அந்த உரிமையோடு, தாங்கள் எப்படி வெளிப்படையாக திரு. பல்வீர்சிங் I.P.S., அவர்கள் தொடர்பான உங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் பகிர்ந்தீர்களோ! அதே போல் நாங்களும் திரு.பல்வீர்சிங் I.P.S., அவர்கள் தொடர்பான எங்கள் கவலையையும் ஆதங்கத்தையும் அக்கறையுடன் வெளிப்படையாக பகிர்கின்றோம். எங்களின் இந்த அறிக்கையை தங்களுக்குச் சொன்னதாக எடுத்துக் கொண்டு, இதற்கு பதில் அளிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையானது தமிழ்நாட்டிற்கு முற்றிலும் புதியதாகும். தமிழ்நாட்டில் இவ்வாறு காவல் நிலைய சித்திரவதைகள் தொடர்பான பிரச்சனைகள் வெளிப்பட்டு வரும் போது அவை தொடர்பாக "காவல்துறை அதிகாரிகளின் சங்கம்" என்ற பெயரில், யாரும் அதில் தலையிட்டு கருத்து சொன்னதில்லை. எனவே முதன்முறையாக, அதுவும் காவல்துறையின் உயர்கல்வித் தகுதியான I.P.S தகுதி பெற்ற அதிகாரிகள் அடங்கிய சங்கத்தின் பெயரில் இப்படி ஒரு அறிக்கை வந்தது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது. தாங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையின் வாயிலாக தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அல்லாத அதிகாரிகள் என்று இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இப்பிரிவினை ஆரோக்கியமானதல்ல. இப்பிரிவினையை தங்களது அந்த அறிக்கை பெரிதாக்கிவிட்டதாகவே உணர்கிறோம்.