- மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாண்புமிகு முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை வெற்றிகரமாக பணியை கொண்டுசெல்ல மக்கள் கண்காணிப்பகம் வாழ்த்துகிறது.
- 2018 மே 22, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிலும் தொடர் நிகழ்வுகளிலும் 16 பேர் பலியான நினைவு தினத்தில் கடந்த தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றாமல் போன கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு
மக்கள் முதல்வர் :
திரைப்பட கலைஞராக தன் வாழ்க்கையை தொடங்கி மக்கள் நேசிக்கும் தலைவராக வளர்ந்து இன்று தமிழ்நாட்டின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்களை வெற்றிகரமாக பணிகளை கொண்டு செல்ல மக்கள் கண்காணிப்பகம் சார்பில் வாழ்த்துகிறோம். தமிழ்நாட்டின் முதல்வராகவும், காவல்துறைக்கு பொறுப்பான உள்துறைக்கும் பொறுப்பேற்றுள்ளார். எனவே கடந்த ஆட்சியில் காவல் சித்திரவதையால் மரணம் அடைந்த 28 குடும்பத்தினருக்கு நீதியையும் நிவாரணத்தையும் பெற்று தர வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வரிடம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பாக மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை வைக்கிறோம்.
காவல் சித்திரவதையில் மரணமடைந்த குடும்பத்தினரை சந்தித்து ஆற்றுப்படுத்தி நிதி கொடுத்த தமிழக முதல்வர்
கடந்த தி.மு.க ஆட்சியில், காவல் விசாரணையின்போது சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட 20 குடும்பத்தினரை 2025ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி அன்று காலையில் பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து மாண்புமிகு முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து சுமார் 3 மணி நேரம் உரையாடினார். இதுபோன்று தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னெடுக்காத செயலை கடந்த ஆண்டு மாண்புமிகு முதல்வர் C. ஜோசப் விஜய் அவர்கள் செய்தார் என்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.
ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் காவல் சித்திரவதையால் ஏற்பட்ட துயரங்கள், இழப்புகளை தனித்தனியாக கேட்டறிந்தார். குறிப்பாக செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீ மரணம் குறித்து கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்ட தாயின் கையைப் பிடித்தும் முதல்வர் C.ஜோசப் விஜய் அவர்கள் கண்கலங்கினார். இப்படி ஒவ்வொரு குடும்பத்தினரையும், கட்டி அணைத்து ஆதரவு தெரிவித்து ஆற்றுப்படுத்தினார். அப்போது மக்கள் கண்காணிப்பகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இ. ஆசீர்வாதம் அவர்கள் சம்பவம் மற்றும் வழக்கு சார்ந்த தகவல்களை எடுத்துரைத்தார். இதனை மிகுந்த கவனத்தோடு கேட்டுக்கொண்ட மாண்புமிகு முதல்வர் அவர்கள், என்னை நம்பி வந்துள்ள நமது சமூகத்தின் கடைசி நிலையில் வாழும் மக்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்கிற விரக்தியை வெளிப்படுத்தினார். ஆனாலும் சில நிமிடங்களில் தன்னை தயார்படுத்திக்கொண்டு கவலைப்படாதீர்கள், நான் உங்களோடு இருக்கிறேன். உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை எதிர்காலத்தில் நான் சரி செய்து உங்களை பாதுகாப்பேன் என்ற நம்பிக்கையை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு வந்திருந்த குழந்தைகளை ஆரத்தழுவி அவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்வித்தார். மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனது சொந்த பணத்தில் ₹25,000 கொடுத்து உதவினார். இதன் பின்னர் அடுத்த நாள் ஜூலை 15ஆம் தேதி அன்று சென்னை சிவானந்த சாலையில் மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களுக்கு நடுவே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு மேடையேறி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சித்திரவதையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உரக்கப்பேசி சித்திரவதைகளை தடுத்து மனித உரிமை பாதுகாக்கும் நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தினார்.
மே 22, ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 16 பேர் உயிர்நீத்த 8ஆம் ஆண்டு
அ.தி.மு.க ஆட்சியில் 2018ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை போலீஸ் துப்பாக்கி சூட்டில் 16 நபர்கள் மரணமடைந்து 8 ஆண்டுகள் கடந்து விட்டது. தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் 2021ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவோம் என கோரிக்கையை முன்வைத்து தி.மு.க தேர்தல் பரப்புரை செய்து வெற்றி பெற்றது. திமுக ஆட்சி வந்த பின்பு கடந்த 16.5.2021 அன்று நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையின் இடைக்கால அறிக்கையை பெற்றது.
இதன் பின்னர் அடுத்த ஆண்டு சட்டமன்றத்தில் வெளியிட்டு ஒப்புதல் பெற்றது. மேலும் துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கை வெளிவந்த பின்பு பாதிக்கப்பட்ட சிலருக்கு நிவாரணம் கொடுக்கப்பட்டது. ஆனால் முழுமையாக கொடுக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது இன்று வரை குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. துறை ரீதியான நடவடிக்கை துவக்கப்பட்டு எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை முழுமையாக எடுக்கப்படவில்லை. இதனால் சில உயர் காவல்துறை அதிகாரிகள் பணி ஓய்வு பெற்று அரசின் முழு பயனையும் பெற்றுள்ளனர். இதன் மூலம் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீதான நடவடிக்கை அப்படியே உள்ளது.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் கோரிக்கைகள்
- நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையின் படி குற்றத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை துவக்கப்பட்டு முழுமையாக முடிக்கப்பட வேண்டும். மேலும் குற்றவியல் நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவு செய்து சிறப்புப் புலனாய்வுக் குழு நியமனம் செய்து விரைவான விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!
- நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையின்படி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள், காயப்பட்டவர்கள், மீதமுள்ள அனைவருக்கும் முழுமையான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்திடுக!
- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கை வாபஸ் பெறவேண்டும். மேலும் வரும் மே 22ஆம் தேதிக்குள் உத்திரவாதம் கொடுத்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறோம்.
காவல் விசாரணையில் மரணமடைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பான கோரிக்கை
- திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் காவல்நிலைய விசாரணயில் நடந்த மரண வழக்குகள் அனைத்தையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவான விசாரணை நடத்தி நீதியை, நிவாரணத்தைப் பெற்று தருக!
- கடந்த ஆட்சியில் காவல் விசாரணையில் மரணமடைந்து, அரசின் நிவாரணம் பெறாத பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும், திருப்புவனம் அஜித்குமார் வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழங்கியதுபோல் தமிழக முதல்வர் அவர்களே! நிவாரணம் வழங்குக!
- கடந்த ஆட்சியில் காவல் விசாரணையில் மரணமடைந்த SC/ST சமூகத்தை சேர்ந்தவர்கள் வழக்குகளை SC/ST POA Act சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திடுக!
- விசாரணையின் போது காவல் நிலையங்களில் நடந்து வரும் சித்திரவதைகளை தடுத்திடவும், சித்திரவதை இல்லாத சமூகத்தை உருவாக்க உங்கள் ஆட்சியில் சித்திரவதைக்கு எதிரான புதிய சிறப்புச் சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்திடுக!
நன்றி
