தமிழகத்தில் காவல் மரணம் தொடர்வதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
- சென்னை உயர்நீதிமன்றம் அப்பு (எ) ராஜசேகர் காவல் மரண வழக்கை தாமாக முன் வந்து (Suo-Moto) தன் வழக்காக எடுத்து அதன் விசாரணையை கண்காணிக்க வேண்டும்.
- சம்பவ நாளன்றே தொடர்புடைய காவலர்களை பணியிடை நீக்கம் செய்தததை வரவேற்கிறது.
- உயிரிழந்த அப்புவின் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்துகிறது.
சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே உள்ள அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தைச் சேர்ந்தவர் அப்பு (எ) இராஜசேகர் (31). கடந்த 12.06.2022 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்ததை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இவரை கொடுங்கையூர் போலீசார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விசாரணைக்காக அழைத்துச் சென்று 12.06.2022 அன்று காவலில் இருந்த போது மரணம் அடைந்துள்ளார்.
சமீபத்தில் திருவண்ணாமலையில் தங்கமணி, சென்னையில் விக்னேஷ் ஆகியோர் காவல் மரணம் அடைந்த பின்னரும் காவல்துறை மரணம் தொடர்வது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
காவல் மரணங்கள் தொடர்வது என்பது காவல்துறையின் பைத்தியக்காரத்தனம் என்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கடந்த 10.06.2022 அன்று கூறியுள்ளார். அவர் கூறியது உண்மை என்பதற்கு இச்சம்பவம் மேலும் ஒரு சான்றாகும்.
காவல் மரணத்தால் உயிரிழந்த அப்பு (எ) ராஜசேகரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 10 இலட்சம் பணத்தினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது.
சம்பவம் நடந்த அன்றே மாநில காவல்துறை இயக்குநர் அவர்கள் தலையீடு செய்து இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது தமிழக காவல்துறை வரலாற்றில் முதன்முறை என்பதும், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 176 (1) (A) வழக்காகப் பதிவு செய்ததும் வரவேற்கத்தக்கது ஆகும். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சந்தோஷ் எதிர் மாவட்ட ஆட்சியர் வழக்கில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை பின்பற்றி நடவடிக்கை எடுப்பதை மக்கள் கண்காணிப்பகம் பாராட்டுகிறது.
அப்பு (எ) ராஜசேகர் காவல் மரணத்தில் தொடர்புடைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், சார்பு ஆய்வாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதை மக்கள் கண்காணிப்பகம் பாராட்டுகிறது.
ஆனால் மேற்படி காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் ஏற்கெனவே மாநில மனித உரிமை ஆணையத்தால் அவருக்கு எதிராக பரிந்துரை பெறப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளது. காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தொடர் குற்றவாளியாக இருக்கிறார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும்.
விசாரணைக் கைதிகளை இரவில் காவல் நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது என்று மாநில காவல்துறை இயக்குநர் மதிப்பிற்குரிய திரு. சைலேந்திரபாபு, IPS அவர்கள் உத்தரவிட்ட பின்னும் 11.06.2022 சனிக்கிழமை காலையில் இருந்து 12.06.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கொடுங்கையூர் காவல் நிலையத்திலும் அதன் புறக்காவல் நிலையத்திலும் அப்பு (எ) ராஜசேகரை எவ்வாறு வைத்திருந்தனர். காவல்துறை இயக்குநரின் கட்டளையை சென்னை காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால், சென்னையில் கடைபிடிக்கமாட்டாறா என்ற பெருத்த சந்தேகம் எழுகிறது. இதற்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பொறுப்பு ஏற்க வேண்டும். மேலும் கொடுங்கையூர் காவல் நிலையத்திலும் அதன் புறக்காவல் நிலையத்திலும் ஆகியவற்றில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை உடனடியாக பாதுகாத்து பொதுத் தளத்தில் வெளியிட வேண்டும்.
11.06.2022 அன்று இரவு ரோந்துப் பணியில் இருந்த உயர் காவல் அதிகாரிகளுக்கு அப்பு காவலில் இருந்தது தெரியாதா? அல்லது உண்மை மறைக்கப்படுகிறதா? என்ற நேர்மையான கேள்வி எழுகிறது.
இத்துடன் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41 (b) (c) (d) ஆகிய மூன்றையும் காவல்துறை இந்த வழக்கில் முழுமையாக கடைப்பிடிக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.
காவல் நிலையத்தில் அப்பு இருக்கும் போது அவருடைய உடல் நிலை சரியில்லை என்றால் அங்கேயே முதலுதவி அளித்திருக்கலாம் அல்லது 108 ஆம்புலன்சை வரவழைத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கலாம். இதை விடுத்து பெயர் குறிப்பிடாமல் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக கூறுவது ஏன்? அதற்குப் பின் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது பெருத்த தொடர் சந்தேகத்தை எழுப்புகிறது. எந்த ஒரு சாதாரண மனிதனும் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், சந்தோஷ் எதிர் மாவட்ட ஆட்சியர் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி, ஒரு பேராசிரியரின் தலைமையில் சென்னையில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்களால் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். (பேராசிரியராக இருக்க வேண்டுமே தவிர உதவி, துணை, இணை பேராசிரியர்களாக இருக்கக்கூடாது.
உடற்கூறாய்வு நடைபெற்ற அன்றே அதன் அறிக்கையையும் அதன் வீடியோ பதிவையும் பாதிப்புற்ற குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதை ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.
காவல் மரணமடைந்த அப்பு (எ) ராஜசேகரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு மருத்துவ வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ அதிகாரி ஒருவரும் உதவி செய்ய வேண்டும். மேலும் சென்னை உயர்நீதிமன்றமும், மாநில மனித உரிமை ஆணையமும் அப்பு (எ) ராஜசேகரின் காவல் மரணத்தை தாமாக முன் வந்து (Suo-Moto) தன் வழக்காக எடுத்து, விசாரணையை கண்காணிக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுக்கிறது.
மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு மூத்த வழக்கறிஞர்களை நியமித்து தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் சட்டப்படி, இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது.
இப்படிக்கு,
ஹென்றி திபேன்