for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

செங்கல்பட்டு அரசினர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை சித்திரவதை செய்து கொலை செய்தவர்கள் மீது நடவடிக்க எடுத்த தமிழக முதல்வரை மக்கள் கண்காணிப்பகம் பாராட்டுகிறது. மேலும் கொலையை மறைக்க முயன்ற மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருடன் கூட்டாக செயல்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

 

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்துள்ள கன்னடபாளையம் குப்பை மேடு பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவருடைய கணவர் பழனி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருக்கு 3 பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகன் கோகுல்ஸ்ரீ (17) தாம்பரம் இரயில் நிலையம் அருகே இருக்கும் பேட்டரிகளை திருடிய வழக்கு சம்பந்தமாக கடந்த 29.12.2022 அன்று ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் டிசம்பர் 30 தேதி மாலை நீதிபதி முன்னிலையில் சிறுவன் கோகுல்ஸ்ரீ-யை ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்துள்ளனர்.

இதனை அடுத்து  31.12.2022 அன்று, மாலை 5 மணி அளவில் சிறுவன் கோகுல்ஸ்ரீ-யின் அம்மா பிரியா அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட சிறப்பு இல்ல காவலர்கள், கோகுல்ஸ்ரீ-க்கு உடல்நிலை சரியில்லை என தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்த காவலர்கள் மிக மோசமான நிலையில் மகன் இருப்பதாகும் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட காவலர்கள் மகன் உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.

தனது மகன் கோகுல்ஸ்ரீ சாவில் மர்மம் இருப்பதாக  கூறி தாய் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் 11.01.2023 அன்று புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் நீதிமன்ற காவலில் இருந்த சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீசார் 176(1)(A) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 03.01.2023 அன்று நீதிபதி நடுவர் ரீனா முன்னிலையில் உடல்கூறாய்வு நடைபெற்றது. 

சிறுவன் கோகுல்ஸ்ரீ காவல் மரணம் கொலை வழக்கு சம்பந்தமாக 10.01.2023 மற்றும் 11.01.2023 ஆகிய இரு நாட்கள் மக்கள் கண்காணிப்பகம் சார்பில் களஆய்வு செய்யப்பட்டு உண்மையை கண்டறிந்து தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம். எச் ஜவாஹிருல்லா MLA, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சார்ந்த திரு. ஆளுர் ஷாநவாஸ் MLA ஆகியோர் மூலமும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனடிப்படையில் சிறுவன் கோகுல்ஸ்ரீ கொலை வழக்கில் கூடுதல் கவனம் செலுத்தி குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்தமைக்கு தமிழக முதல்வர் அவர்களுக்கும் துணைபுரிந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்கள் கண்காணிப்பகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் குற்றத்தில் ஈடுபட்ட சிறுவர் கூர்நோக்கு கண்காணிப்பாளர் மோகன், பணியில் இருந்த காவலர்கள் சந்திரபாபு,வித்யாசாகர், சரண்ராஜ், ஆனஸ்ட் ராஜ், விஜயகுமார் ஆகிய ஆறு பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையான சிறுவனின் அம்மாவை  31.12.2022, 01.01.2023 ஆகிய இரு தினங்களாக ரகசிய இடத்தில் அடைத்து வைத்து மிரட்டி சாட்சியை மறைக்க திட்டமிட்டு செயல்பட்ட மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் (DCPO - பொறுப்பு) சிவக்குமார் மற்றும் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் பணிபுரியும் வார்டன் விஜயராஜ், செவிலியர் நந்தகுமார், சமையலர்கள் சாந்தி, சரஸ்வதி ஆகியோரை விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறது. எவ்வித தலையீடுமின்றி சுதந்திரமாக செயல்படும் வகையில் துறைசாரா நபர்கள், மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழுவை ஏற்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் உள்ள பிற சிறுவர்களுக்கு சித்திரவதையால் ஏற்பட்ட  காயங்களை பரிசோதனை செய்து, கண்காணித்து உயர்தர சிகிச்சை அளிக்கவும் மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் செயல்படும் சிறார் கூர்நோக்கு இல்லங்களை கண்காணித்து இது போன்று சித்திரவதைகள் நடைபெறாமல் தடுப்பதற்கு குழந்தைகள் நல உரிமைச் செயற்பாட்டாளர்கள் அடங்கிய ஒரு குழுவினை உருவாக்கி ஆய்வு செய்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிடவும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் சொந்த வீடு இல்லாமல் கணவனை இழந்த நிலைமையில், ஆதரவின்றி தவிக்கும் கொலை செய்யப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீ குடும்பத்திற்கு நிவாரணமும், அரசின் சார்பில் ஒரு வீடும் அளித்திட கோருகிறோம். 

 

ஹென்றி திபேன்

நிர்வாக இயக்குநர்

மக்கள் கண்காணிப்பகம்

Full Media ReportJoin us for our cause