கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். ஜூலை 13 அன்று காலை அப்பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்யச் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள், ஆசிரியர்கள் மாணவியை படிக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்ததாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி மாணவி எழுதியதாக தற்கொலைக் கடிதம் ஒன்றையும் உறவினர்கள் முன் படித்துக் காட்டியுள்ளதாக அறிய முடிகிறது. அந்த கடிதத்தின் அடிப்படையில் அப்பள்ளி கணித ஆசிரியர் வசந்த், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
........................
மக்கள் கண்காணிப்பகம் முன்வைக்கும் பரிந்துரைகள்:
- தமிழக மாநில மனித உரிமை ஆணையமும், மாநில குழந்தை உரிமைகள் ஆணையமும், மாநில பெண்கள் ஆணையமும் கூட்டாக இணைந்து மாணவி மரணம் குறித்து முழுமையான ஆய்வினை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு உண்மையாக நடந்தவை என்ன என்பதை அறியும் உரிமை உண்டு. காவல்துறையின் இறுதிக்கட்ட நடவைக்கைகள் மக்களின் உண்மை அறியும் தாகத்தை தணிக்கவில்லை, நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே தான் சட்டப்படி நிறுவப்பட்டுள்ள ஆணையங்கள் கூட்டாக இணைந்து உண்மை நிலையை கண்டறிந்து பொதுவெளிக்கு அறிவிப்பதும், சட்டரீதியான நடவடிக்கையை உறுதி செய்வதும் அவசியமாகிறது. இந்த சூழலை கவனத்தில் கொண்டு, மேற்கண்ட மூன்று ஆணையங்களின் தலைவர்கள் தலைமையில் ஒரு உயர்மட்ட உண்மையறியும் குழு உடனடியாக ஏற்படுத்தப்பட்டு விசாரணையை துரிதமாக தொடங்க வேண்டும். இக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அலுவலர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை இணைத்து இந்த ஆய்வினை முன்னெடுக்க வேண்டும்.
- ஜூலை 13 முதல் – ஜூலை 16 வரை உயர் காவல்துறை அலுவலர்கள், உயர் கல்வித்துறை அலுவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? அவர்களின் அலட்சியமே ஜூலை 17 வன்முறைக்கு காரணமாக இருக்குமோ என்று சந்தேகிக்க முடிகிறது. இவர்கள் மீதான கவனக்குறைவு குறித்து சிறப்பு விசாரணையை மாநில மனித உரிமை ஆணையம் நடத்திட வேண்டும்.