கோகுல்ஸ்ரீ என்கிற 17 வயதான சிறுவன் 29.12.2022 அன்று இரவு சுமார் 10.00 மணியளவில் தாம்பரம் இரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளான். 30.12.2022 அன்று சிறுவனின் தாயார் பிரியாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் தனது மகனை பார்த்து சென்ற பின், சிறுவன் கோகுல்ஸ்ரீ அரசினர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். இந்நிலையில் 31.12.2022 அன்று சிறுவன் கோகுல்ஸ்ரீ இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 01.01.2023 அன்று தாயார் தனது மகன் கோகுல்ஸ்ரீ உடலை பார்த்து, உடலில் ஏற்பட்டுள்ள கொடுங்-காயங்களை உடன் இருந்த மாஜிஸ்ட்ரேட்டிடமும், மருத்துவர்களிடமும் கூறியுள்ளார்.
17 வயதான சிறுவன் கோகுல்ஸ்ரீ கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு முன் பகுதியிலும், பின் பகுதியிலும் காயங்கள் இருந்து, இடது பக்கம் கண்ணின் நெற்றியிலிருந்து வலதுபக்கம் கண்ணின் கீழ் கன்னம்வரை தடியால் அடிக்கப்பட்ட தடமும், கீழ் உதடு இரண்டாக பிளவுபட்ட நிலையிலும் கடும் சித்திரவதைக்கு ஆளாகி 176 (1) (A) பதிவு செய்து புலன் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் அந்த கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இது போன்ற சித்திரவதைகள் நடந்து கொண்டே உள்ளது. இப்போது அந்த கூர்நோக்கு இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளை பார்வையிட்டு, சட்டைகளை கழற்றிப் பார்த்தால் அவர்களுக்கும் காயங்கள் இருப்பது தெரியும். ஆகவே இந்த வழக்கிற்கான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில்,
- சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள கண்காணிப்பாளர், தலைமை வார்டன், உதவி வார்டன், தலைமைக் காவலர் மோகன், இரவு காவலர்கள் ஹானஸ்ட்ராஸ், சரண்ராஜ், விஜயகுமார், சின்னமுத்து, செவிலியர் நந்தகுமார், கோகுல்ஸ்ரீ தாயாரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று தங்களது வீட்டில் அடைத்து வைத்தவர்களான அங்கு பணி புரியும் சமையலர்கள் சரஸ்வதி, சாந்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
- செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு-DPCO) சிவக்குமார், இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளான மற்ற சிறார்களை மிரட்டுவது, மறைப்பது போன்ற வேலைகளைச் செய்து வருகின்றார். அவரோடு சேர்ந்து சமூக பாதுகாப்புத் இயக்குநர் திருமதி. வளர்மதி அவர்களும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு- DPCO) அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார். ஆகவே பொறுப்பு DPCO சிவக்குமார் அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
- மாவட்ட ஆட்சித் தலைவர் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்யும் வகையில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தை நேரடியாக பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளின் பாதிப்புகளை பதிவு செய்து, அதற்கு என்ன காரணம் என்று விசாரணை செய்யவேண்டும். அங்கு பணியாற்றும் ஆசிரியர்களாலும் சிறார்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். சிறுவன் கோகுல்ஸ்ரீ கொல்லப்பட்ட போது 4 சிறார்களையும் சேர்த்து சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளனர். அவர்களும் கொடுங்காயங்களோடு உள்ளனர். அச்சிறார்களின் காயங்கள் ஆறுவதற்கு முன்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒரு மருத்துவக்கு குழுவுடன் எந்த தாமதமுமின்றி அங்கு சென்று ஆய்வு செய்யவும்கோருகிறோம்.
- கொல்லப்பட்ட சிறுவனின் தாயையும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு- DPCO) சிவக்குமார் தொடர்ந்து மிரட்டி வருகிறார். அவரின் மிரட்டலை எவ்விதத்திலும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எவ்விதத்திலும் அனுமதிக்காது பாதிப்பு ஏற்படுத்திய உறுதுணையாக செயல்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு. கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும் கோருகிறோம்.
- மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ஒரு சுதந்திரமாக செயல்படும் வகையில் தனி குழு ஒன்றை நியமனம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறுவர் கூர்நோக்கு இல்லங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிடவும் கோருகிறோம்.
ஹென்றி திபேன்
நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்