கல்வி நிலைய வளாகங்களில் மதரீதியான அச்சுறுத்தல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான கல்வி பல்வேறு சமூக காரணங்களால் தடுத்து நிறுத்தப்படும் சூழல் நமது சமூகத்திற்கு அபாயகரமானதாகும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் உணவு, உரிமை குறித்து கேள்வி எழுப்புவது குழந்தைகள் உரிமை மீறலாகும். இதுபோன்ற சூழல் பள்ளிகளில் வளர்ந்துவிடக்கூடாது. எனவே குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறலில் ஈடுபட்ட பயிற்சி ஆசிரியை அபிநயா என்பவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பயிற்சி ஆசிரியை அபிநயா மற்றும் வகுப்பு ஆசிரியர் ராம்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை இராஜேஸ்வரி மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோரை இடைநீக்கம் செய்யவேண்டும். ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமியின் மீது நடந்த உரிமை மீறல் சம்பவம் குறித்து மாவட்ட அளவில் உள்ள குழந்தைகள் நலக்குழு (CWC) மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் (DCPO) ஆகியவற்றில் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை கேட்கவேண்டும். பாதிக்கப்பட்ட ஏழாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுமி பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று கல்வியினை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.