for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Ockhi Cyclone Public Inquest Organizing Committee (OPIOC)

Convenor : Kodikal Sheikh Abdulla

Mobile: +91 9486507201, +91 9994368571 & +91 9442016222

E-mail: ockhipublicinquest@gmail.com

 

29.12.2017

 

பத்திரிகைச் செய்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட உயர்மட்ட உண்மை அறியும் மக்கள் குழுவின்இடைக்கால அறிக்கை

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு மும்பை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. ஹோல்சே பட்டேல் தலைமையிலான 15 பேர் கொண்ட உயர்மட்ட உண்மை அறியும் மக்கள் குழு டிசம்பர் 28, 29 தேதிகளில் நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தது. பேரிடர் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு மாதம் முடிந்த நிலையில், மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளில் மிகப் பெரிய இடைவெளியும், சுணக்கமும் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மனித உயிரிழப்புகளைத் தடுப்பதிலும், தொழில் நுட்ப உதவிகளை பாதிக்கப்பட்ட  மீனவர்களுக்கு வழங்குவதிலும் அரசுகள் தரப்பில் மிகுந்த கால தாமதம்  ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. பாதிக்கப்பட்ட மீனவர்களும், பிற சமூகத்தினரும் அரசால் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை.

 

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், மத்திய அமைச்சருமான திரு பொன்.இராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட மீனவ கிராங்களுக்கு இதுவரை செல்லவேயில்லை. மாறாக புயலுக்குப்பின் ஈரான் நாட்டுக்குச் சென்றுள்ளார் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

உண்மையறியும் குழு கண்டறிந்தவை:

  • சுனாமி பேரிடர் மேலாண்மையிலிருந்து மத்திய, மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகமும் எந்த படிப்பினையும் பெறவில்லை.
  • நவம்பர் 29 ஆம் தேதிக்கு முன்னர் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களைக் காப்பாற்ற அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ள வில்லை. அவர்கள் மத்திய, மாநில அரசுகளால் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளார்கள்.இது போன்ற சூழலில் இந்த மீனவர்களுடைய நிலை நம்மை கதிகலங்க வைக்கிறது.
  • இவ்வளவு பெரிய பேரிடருக்குப் பின், அவ்வளவு உடைமை இழப்புக்குப் பின்னரும், பெரும்பாலான மீட்புப் பணிகளில் மீனவர்களே தங்களது சொந்த முயற்சியில் ஈடுபட்டு பல மீனவர்களை காப்பாற்றியுள்ளனர்.
  • இது போன்ற பாதிக்கப்பட்ட சூழல்களில் உடனடி நிவாரணமும், நீண்டகால நிவாரணமும் பெற அச்சுறுத்தல் இன்றி அரசிடம் புகார் கொடுக்கவும், கோரிக்கை எழுப்பவும், தங்களை பாதுகாக்கவும் குடிமக்கள் என்ற முறையில் இம்மக்களுக்கு இந்த உரிமைகள் உண்டு.
  • அரசு இதனை வெறும்  சட்டம் ஒழுங்கு பிரச்சனையுடன் தொடர்பு படுத்துவது இயற்கையான நீதி நெறிமுறைகளுக்கு முரணானதாகும்.
  • ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்க்கு உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஏற்பட்ட பாதிப்புகளை நேர் செய்ய இச்சமூகம் திருச்சபைகளுடன் இணைந்து மிகச்சிறந்த பணிகளைச் செய்திருக்கிறது. இதன் மூலம் அரசு செய்த பணிகளைக் காட்டிலும், மீனவ மக்களே இப்பேரிடரை எதிர்கொள்வதில் மிகச் சிறந்த பங்காற்றியிருக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்கிறோம்.
  • உயிரிழப்பாலும், உடைமை இழப்பாலும் வாழ்வின் இருண்மைக்குள் நிர்க்கதியாய் நிற்கும் பாதிப்புற்றோரின் வலிமிகுந்த குரலில் இழப்புகளே ஒலிக்கிறது. ஆனால் இதற்கு முரணாக அரசின் பதிலுரையில்  வெறும் கொள்கை விவரங்களும், பாதிப்பின் எண்ணிக்கையும்  மட்டுமே உள்ளன.  
  • இழப்புகளுக்கு மத்தியிலும்,  சாதி, மத, வர்க்க  வேற்றுமைகளைத் தாண்டி ஒட்டு மொத்த சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில், பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு நிலை பிரதிபலிக்கிறது என்பதை அறிய முடிக்கிறது.
  •  பாதிக்கப்பட்ட மக்களை சாதிய, மத  ரீதியாக பிளவு படுத்த முயற்சிக்கும்  அரசியல் கட்சிகளையும், குழுக்களையும் நாங்கள்  வன்மையாகக் கண்டிக்கிறோம். சமூக இணக்கத்தையும், நல்லுறவையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உள்ளது.
  • பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்களது உயிருக்கான மதிப்பு குறித்து ஆழமான கேள்விகளை எழுப்புகிறார்கள். அதிகார பலமுள்ள குழுக்களை ஒப்பிடும்பொழுது தங்களது உயிருக்கான மதிப்பு என்பது ஒன்றுமில்லையோ என்று ஆதங்கத்தோடு வினா எழுப்புகின்றனர். இது போன்ற பேரிடர் சூழல்களில் உயிருக்கான மாறுபட்ட இத்தகைய  நிலைப்பாடுகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. இது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியது.
  • புயலுக்குப் பிந்திய சூழலில் அனைத்து மட்டங்களிலும் கடப்பாட்டுக்கான வரையறை (frame work of accountability) பற்றிய எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
  • பாதிக்கப்பட்டோருக்கு அரசு வழங்கும் உடனடி நிவாரணம் மற்றும் மறு வாழ்வுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து வெளிப்படையான கண்காணிப்பு இல்லை.

பரிந்துரைகள்:

  • இப்பேரிடர் மத்திய, மாநில அரசுகளால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. மத்திய அரசு உடனடியாக இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்.
  • பேரிடரின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாளுவதில் மக்களின் பங்கேற்பையும், ஈடுபாட்டையும் உறுதி செய்யும் வகையில் அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
  • கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் மீனவ தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
  • எல்லா வகையான கட்டுமரங்கள், நாட்டுப் படகுகள், விசைப் படகுகள் ஆகியவை கடலுக்குள்  செல்வதும்,  கரைக்கு திரும்பி  வருவதும் முறையாகப்   பதிவு செய்யப்பட வேண்டும்.
  • படகுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவற்றின் அளவு, படகில் இருப்போரின் எண்ணிக்கை, படகு செல்லும் தூரம் போன்ற விவரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • மீன் பிடிக்கச் செல்லும் அனைத்து மீனவர்களுக்கும் உயிர் பாதுகாப்பு ஆடைகள், முதலுதவி பெட்டிகள்  போன்றவை இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
  • மக்களின் பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பை விட முக்கியமானது. எனவே

செயற்கைக்கோள் தொலைபேசிகளும், பிற தொலைத் தொடர்பு சாதனங்களும் மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

  • மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பேரிடர் சூழலில் உயிரிழக்கும் போது, அக்குடும்பங்களில் வருமானம் ஈட்டும் நபர்கள் இல்லாமல் போவதால் இழப்பீடும், மறுவாழ்வுப் பணிகளும் அக்குடும்பங்களின் நீண்டகால வாழ்வாதாரத் திட்டங்களுக்கானதாக அமையப் பெற வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இப்போது  வழங்கியுள்ள நிவாரணத் தொகையான ரூபாய் 5000/-என்பது  மிகக் குறைவான தொகை என்பது மட்டுமல்ல மக்களின் தேவைகளை புரிந்து கொள்ள அரசு மறுக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.
  • படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்ததற்கும், பயிர் சேதத்திற்கும் முறையான இழப்பீடு உடனே வழங்கப்பட வேண்டும் மேலும்  அவற்றுக்கான காப்பீடு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப் பெற வேண்டும்.
  • இறந்த மற்றும் காணாமல் போன மீனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் முப்பது நாட்களுக்குள் வழங்கப் பெற வேண்டும்.
  • கடன் வலைக்குள் சிக்கிக் கிடக்கும் விவசாயிகளையும், மீனவர்களையும் பாதுகாக்கும் வகையில் அரசு உடனடியாக அவர்களது கடன்கள் அனைத்தையும் இரத்து செய்ய வேண்டும். விவசாய நிலங்களில் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக அரசு கணக்கீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
  • உயிரிழந்த மற்றும் பாதிப்புக்குள்ளான மீனவ குடும்பங்கள் தங்களுக்கு நேர்ந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கின்றன. இக்குடும்பங்களுக்கு ஆற்றுப்படுத்துதல் மற்றும் உளவியல்  ரீதியான உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும்.
  • பாதிக்கப்பட்டக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்விக்கான செலவு அனைத்தையும் அரசே பொறுப்பேற்க வேண்டும்.
  • பேரிடர்க்குப் பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு மற்றும் நீதி வேண்டி குரல் எழுப்பிய போராளிகள் புனையப் பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.

உயர்மட்ட உண்மை அறியும் குழுவில் இடம் பெற்றோர்:

  1. நீதியரசர் (ஓய்வு) பி.ஜி.ஹோல்சே பட்டேல், முன்னாள் நீதிபதிபதி, மும்பை உயர் நீதி மன்றம்.
  2. முனைவர் இராமாத்தாள், முன்னாள்தலைவர், மாநில மகளிர் ஆணையம்
  3. பேராசிரியர் ஷிவ்.விஸ்வநாதன், ஜிண்டால் சட்டப் பல்கலைக் கழகம்
  4. திருமதி.சபா நக்வி,தில்லி, மூத்த பத்திரிகையாளர், புது தில்லி
  5. பேராசிரியர் பாரிவேலன், TISS, மும்பை
  6. திரு டி.ஜே,ரவீந்திரன், முன்னாள் செயலர், ஐ. நா.பன்னாட்டு விசாரணை ஆணையம் (கிழக்கு திமோர் மற்றும் கம்போடியா)
  7. முனைவர் பால் நியுமன், பெங்களுரு பல்கலைக்கழகம்
  8. பேராசிரியர் எல்.எஸ்.காந்தி தாஸ், மத்திய பல்கலைக் கழகம், குல்பார்கா
  9. பேராசிரியர் இராமு மணிவண்ணன், சென்னை பல்கலைக் கழகம்
  10. திரு நாஞ்சில் குமரன், தமிழக முன்னாள் காவல்துறை துணைத் தலைமை இயக்குனர்
  11. முனைவர் சுரேஷ் மரியசெல்வம், ஐ.நா.வளர்ச்சித் திட்ட முன்னாள்அதிகாரி
  12. பேராசிரியை பாத்திமா பாபு, தூத்துக்குடி
  13. திரு ஜான் சாமுவேல், ஐ.நா.வளர்ச்சித் திட்ட முன்னாள்அ திகாரி

 

For more information kindly contact

  • M.A.Britto – 9442618117
  • I. Aseervatham 99943-68571

 

 





Join us for our cause