மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணமடைந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் மகன் பாலமுருகன். இவரை கடத்தல் வழக்கு விசாரணைக்காக அவனியாபுரம் போலீஸார் கடந்த 2019-ல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் பாலமுருகன் மர்மமான முறையில் இறந்தார்.
விசாரணையின்போது போலீஸார் தாக்கியதில் பாலமுருகன் இறந்ததாகவும், பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும், இழப்பீடு வழங்கவும் உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் முத்துக்கருப்பன் மனு தாக்கல் செய்தார். பின்னர் இவர் மனுவை திரும்பப் பெற்றார்.
இந்நிலையில் போலீஸார் மிரட்டியதால் மனுவை முத்துக்கருப்பன் திரும்பப் பெற்றதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றிடிபேன் புகார் அளித்தார். இதையடுத்து பாலமுருகன் மரணம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளை பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், பாலமுருகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பாலமுருகன் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாகக் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஹென்றிடிபேன் கேட்டுக் கொண்டார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.