ஏப்ரல் 18ஆம் தேதி இரவு 11 மணியளவில், வி விக்னேஷ் (வயது 23) மற்றும் அவரது நண்பர்களும் (ஆட்டோ ஓட்டுநர் பிரபு மற்றும் சுரேஷ்) சென்னை நகரின் கெல்லிஸ் பகுதிக்கு அருகே போதைப்பொருள் (கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி) வைத்திருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் கழித்து சென்னையில் உள்ள காவல்நிலையத்தில் 23 வயது இளைஞன் தாக்கப்பட்டு இறந்ததாக தகவல் வெளியானது. ஒரு வாரத்திற்குப் பிறகு, இந்த வழக்கில் அமைதியாக இருக்க காவல்துறை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 1 லட்சம் வழங்கியதாக அவரது சகோதரர் கூறுகிறார்.
இதை தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விக்னேஷின் மூத்த சகோதரர் வினோத், “கைது செய்த நாளன்று இரவு 11.30 மணிக்கு, விக்னேஷின் முதலாளி ரஞ்சித் உள்ளிட்ட 5 பேர் கெல்லீஸ் சிக்னலுக்கு வந்து விக்னேஷ் தன்னிடம் பணி செய்வதை உறுதி செய்தும் காவலர்கள் தாக்குதலைத் தொடர்ந்தார்கள்.
காயமடைந்த சுரேஷை காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரிமாண்ட் உத்தரவு பெற்று புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
அதன்பிறகு என்னை பட்டினம்பாக்கம் காவல் ஆய்வாளர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். ஆயிரம் விளக்கு காவல் ஆய்வாளர் எங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வழங்கினார். 29ஆம் தேதி காவலர்களால் கொடுக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை திருப்பி கொடுக்க சென்னை பெருநகர குற்றவியல் நீதித்துறை நடுவரிடம் மனு தாக்கல் செய்தோம். சம்மன் அனுப்பி வாக்குமூலம் பெற்ற பின் பணத்தை பெறுவதாக நீதிபதி கூறியுள்ளார்.” என்று கூறுகிறார்.
விக்னேஷ் உடலில் காயங்கள் இருப்பதாகவும் வினோத் குற்றம் சாட்டினார். “பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடலைப் பார்க்க நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. எங்கள் வீட்டு உரிமையாளரிடம் போலீசார் பேசி எங்களை வீட்டை காலி செய்யவைக்குமாறு மிரட்டினர்,” என்று வினோத் கூறினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, “சந்தேகத்திற்கிடமான மரணம்” என்று வழக்குப் பதிவு செய்த போலீஸார், உதவி ஆய்வாளர் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். “லாக்அப் டெத்தில் ஈடுபட்ட காவலாளிகளை பணிநீக்கம் அளிப்பது மட்டுமல்லாமல், அவர்களை கைது செய்யவேண்டும்”, என்று வழக்கறிஞர் ஹென்றி தீபன் கூறுகிறார்.
இந்த வழக்கு விசாரணை குற்றப்பிரிவு சிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த வழக்கின் விசாரணை முழுமையாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்று உறுதியளித்தார். விக்னேஷுடன் கைது செய்யப்பட்ட சுரேஷின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்றும் அவர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.