சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் காணாமல் போனது தொடர்பாக எழும்பூர் போலீஸார் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரான ஹென்றி டிபேன் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில்,‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்தாண்டு மே 22-ம் தேதி போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் போலீஸ் உயரதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் சென்னையில் வீடியோ வெளியிட்டார். இந்த ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த பிப்.15 அன்று சென்னையில் இருந்து நாகர்கோவில் ரயிலில் மதுரைக்குச் சென்ற அவர் திடீரென மாயமாகியுள்ளார். திண்டிவனம் அருகே ஒலக்கூர் ரயில் நிலையத்துக்குப்பிறகு அவரது செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.