சூழலியலாளர் முகிலன் காணாமல் போன விவகாரத்தில் ஆட்கொணர்வு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், ஆஜரான சிபிசிஐடி தரப்பு இந்த வழக்கில் இதுவரை 148 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும், மக்களிடம் துண்டறிக்கைகள் கொடுக்கப்பட்டு இவரைக் கண்டால் தகவல் தெரிவிக்கும்படி சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சென்னை எழும்பூர் ரயில்வே காவல்நிலையம் இன்னும் அத்தனை கேமிரா காட்சிகளையும் ஒப்படைக்காத நிலையில் முகிலன் விவகாரத்தில் சரிவர எந்த முடிவுக்கும் செல்லமுடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. முகிலன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், சிபிசிஐடி விசாரணையும் சரிவர நடைபெறவில்லை என்றும் முகிலன் தொடர்பாக ஆசீர்வாதம் என்பவரிடம் விசாரிக்க வந்த சிபிசிஐடி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ``செயற்பாட்டாளர் ஹென்றி டிபெய்ன் பெயரில் டிபெய்ன் என்றால் என்ன, வழக்கறிஞர் ஏன் கட்டணமில்லாமல் இந்த வழக்கை நடத்துகிறார்?” என்பது போன்ற கேள்விகளைதான் கேட்கிறார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் உட்பட முழுவிவரத்துடன் வருகின்ற 18 மார்ச் 2019ல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.