மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ததில் காயங்கள் இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
கோட்டைப்பட்டினம் பிருந்தா தாக்கல் செய்த மனு: எனது கணவர் ராஜ்கிரண். இவர் அக்.,18 ல் சிலருடன் கடலில் மீன் பிடிக்க படகில் சென்றார். படகு மீது இலங்கை கடற்படை மோதி சேதப்படுத்தியது. ராஜ்கிரண் கடலில் மூழ்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின் அவரது உடல் மீட்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டது. கணவரை இலங்கை கடற்படை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மறு பிரேத பரிசோதனை செய்ய, விசாரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரணையில் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டார்.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று விசாரித்தார். மனுதாரர் தரப்பு: ராஜ்கிரண் உடலில் குண்டடிபட்டதற்கான காயங்கள் இல்லை. கடலில் மூழ்கி இறந்ததாக மறு பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த பின் உடலை சரியாக தைக்காமல் இங்கு ஒப்படைத்துள்ளனர். இதில் சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளன என தெரிவித்தது.நீதிபதி: இதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க மத்திய அரசை எதிர்மனுதாரராக இணைப்பதாகக்கூறி டிசம்பருக்கு ஒத்திவைத்தார்.