மதுரையில் கிறிஸ்துவ ஜெபக்கூடங்கள் மற்றும் போதகர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்து அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்துக் கட்சிக்குழுவினர்மாவட்டஆட்சியரிடம்புதன்கிழமைமனுஅளித்தனர்.
மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலர்கள் வ.வேலுசாமி, கோ.தளபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலர் விஜயராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மதுரை புறநகர் மாவட்டச் செயலர் பா.காளிதாஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி மாநிலச் செயலர் க.ஜான்மோசஸ், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர் ப.கதிரவன் மற்றும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிறுவனர் ஹென்றி திபேன் ஆகியோர் இந்த மனுவை அளித்தனர்.
முன்னதாக திமுக மாவட்டச் செயலர் வ.வேலுசாமி மற்றும் அனைத்துக் கட்சிக் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரையை அடுத்த சிக்கந்தர்சாவடியில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்து கொண்டிருந்தவர்கள் மீது இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி அங்குள்ள பொருள்களையும், பைபிளையும் தீ வைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதேபோல, ஆனையூரில் இரு இடங்களிலும் வழிபாட்டு நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.
தமிழகத்தில் இதுவரை மத ரீதியிலான தகராறு, பிரச்னைகள் ஏற்பட்டதில்லை. ஒருவருக்கொருவர் சகோதரர்களாகப் பழகி வரும் நிலையில் இந்து அமைப்பினர் அமைதியைக் கெடுக்கும் வகையில் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அனைத்துக் கட்சிகள் சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.