மதுரை : மதுரை அவனியாபுரம் போலீஸ் விசாரணையில் டிரைவர் மரணமடைந்தது தொடர்பான வழக்கில் டிச.,31க்குள் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
சோலையழகுபுரம் முத்து கருப்பன்,'என் மகன் டிரைவர் பாலமுருகன். அவரை ஒரு கடத்தல் வழக்கு தொடர்பாக அவனியாபுரம் போலீசார் 2019 ல் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கினர். காயமடைந்த பாலமுருகன் அரசு மருத்துவமனையில் இறந்தார். சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். மனுதாரர் தரப்பில் வாபஸ் பெற்றதால், தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.
'சம்பந்தப்பட்ட போலீசாரின் மிரட்டலால் மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற கிளை பதிவாளருக்கு கடிதம் வந்தது. இதனடிப்படையில் பதிவாளர்,'சம்பவம் தொடர்பாக வழக்கு பதிய வேண்டும். அதை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். இதை தானாக முன்வந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.
இவ்விவகாரத்தில் சிலருக்கு இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோ பதிவின் ரகசிய அறிக்கையை உயர்நீதிமன்ற கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரல் தரப்பு தாக்கல் செய்தது. இதை படித்து பார்த்த நீதிபதிகள் உத்தரவின்படி ஆதிநாராயணன் (மருது சேனை கட்சி தலைவர், அ.ம.மு.க.,கூட்டணியில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டவர்), மதுரை அகிம்சாபுரம் கதிர்வேல், சோலையழகுபுரம் ரமேஷ்குமார், வண்டியூர் யோகநாதன் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். ஏற்கனவே விசாரணையில் முத்துக்கருப்பன் தரப்பு,'போலீசார் தாக்கியதில் பாலமுருகன் இறக்கவில்லை.
விபத்தில் காயமடைந்து இறந்தார்,' என தெரிவித்தது.பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு நேற்று விசாரித்தது. அரசு தரப்பு: வழக்கு விசாரணை ஜூனில் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆடியோ பதிவிலுள்ள குரல் மாதிரியை பரிசோதிக்க தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்கவில்லை. ஜன.,31 வரை கால அவகாசம் தேவை எனக்கூறி, விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை 'சீல்' இட்ட உறையில் வைத்து தாக்கல் செய்தது.
நீதிபதிகள்: இதுவரை எத்தனை பேரை கைது செய்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி விசாரணை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். விசாரணை 2 ஆண்டுகளாகியும் முழுமையடையவில்லை. தாமதமின்றி விசாரணையை முடித்து டிச.,31 க்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேல் விசாரணையின்போது தேவையெனில் துணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்யலாம். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர்.