சென்னையில் போலீஸ் காவலில் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், மத்தியக் குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையை நடத்த வேண்டுமென்றும் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமென்றும் மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன. இந்த சம்பவத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதம் குறித்த பதற வைக்கும் வாக்குமூலங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் மிகத் தீவிரமான மனித உரிமை மீறல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, விக்னேஷின் உறவினர்கள், இந்த நிகழ்வோடு சம்பந்தப்பட்டவர்கள் அளித்த வாக்கு மூலங்களை வெளியிட்டது.
இதில் பல வாக்குமூலங்கள் பதறவைக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. எடுத்துக்காட்டாக, கெல்லீஸ் சிக்னல் அருகே ஆட்டோவை சோதித்த போலீசார் அதில் பயணித்த சுரேஷ் மற்றும் விக்னேஷை அங்கேயே சவுக்கு கட்டையால் அடித்ததாக ஒரு ஆட்டோ டிரைவர் அளித்த வாக்கு மூலம் சொல்கிறது. நடக்க முடியாத அளவுக்கு அடித்த பிறகும் அவருக்கு காவல் நிலையத்தில் சித்ரவதை தொடர்ந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.