for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

கந்துவட்டி கொடுமைகுறித்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட கலை பிரசாரம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

கந்துவட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 23-ம் தேதி இசக்கிமுத்து அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கந்துவட்டிக்கு எதிரான கருத்து வலுப்பெற்றுவருகிறது. இதனிடையே சினிமா தயாரிப்பாளரான அசோக்குமார் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் இணைந்து நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பாக டிசம்பர் 10-ம் தேதி பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில், கந்துவட்டியால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் நடுவர்களாக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள், மூத்த வழக்கறிஞர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் போன்றோர் இடம் பெறுகின்றனர். அதில், கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்குப் பரிந்துரை செய்வதுடன், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தொடுக்க முறையான நடவடிக்கைகள் எடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் மீது அக்கறை கொண்ட அக்கறையின் காரணமாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பொதுமக்களிடம் தெரியப்படுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் வருவதற்கு வழிவகை செய்யும் வகையில், பிரசார கலைப்பயணம் நடைபெற்றுவருகிறது. வி.எம்.சத்திரம் பகுதியில் தொடங்கிய இந்தப் பயணம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், சமாதானபுரம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த கலைக்குழுவின் நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 





Join us for our cause