தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் புதிய வரைவுப் பாடத்திட்டம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன இணையதளத்தில் 20 – 11 – 2017 அன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. மாநில, தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் நோக்கில் இந்தவரைவுப் பாடத்திட்டம் அமைந்திருப்பதாக பாடத்திட்ட வரைவுக் குழு தெரிவித்துள்ளது.
அதேசமயம் மனித நேயம், சமத்துவத்துடன் கூடிய இளைஞர்களை உருவாக்க வேண்டியதும் நமது கடமை ஆகும். பெரியார் வாழ்ந்தஇந்த மண்ணில் சமத்துவம், மனித நேயம்,மனித உரிமை, சமய சார்பின்மை ஆகியவற்றிற்கென்று எப்பொழுதுமே ஒரு தனி இடம் உண்டு. அந்த அடிப்படையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான குடிமையியல் (CIVICS) பாடத்தில், அரசியல் சாசனம் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த பல்வேறு பாடப் பொருள்கள் சேர்க்கப்பட்டுள்ளமை கண்டு மகிழ்ச்சியடைந்ததுடன் பாராட்டவும் கடமைப்பட்டுள்ளோம்.
அதே சமயம் மாணவர்களிடத்தில் இந்தப் பாடப் பொருள்கள் வழக்கம்போல மனப்பாடம் செய்யும் தகவலாக (informative) மட்டும் இல்லாமல் மாணாக்கரின் (Attitude) நடத்தை மற்றும் மனோபாவத்தில்மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் சிறந்த பயிற்சிகளையும் வடிவமைத்து வழங்க வேண்டியதும் அவசியமாகும்.மேலும் பதினொன்று மற்றும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு குடிமைப் பண்பைவளர்க்கும் பாடப்பொருளோ, பயிற்சியோ புதியவரைவுப் பாடத்திட்டத்தில் வழங்கப்படவில்லை. எனவே இந்த மாணவர்களுக்கும் குடியுரிமை பற்றிய ஆளுமைகளை வளர்க்கும் அரசியல் சாசனம், சட்ட அறிவு, விழிப்புணர்வை வளர்க்கும் பாடங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்க ஏற்பாடுகள் செய்தல் வேண்டும்.
“கல்வி என்பது சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான திறவுகோல்” என்பது கல்வியாளர் பாவ்லோபிரேயர் அவர்களின் கருத்து ஆகும். எனவே மாணவர்கள் வரும்காலங்களில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் பிரச்சனைகள் வரும்பொழுது உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொள்வது மற்றும் புகார்அனுப்புவது எப்படி என்பதை அறிமுகம் செய்தல் வேண்டும். இன்றைய தொழில்நுட்பயுகத்தில் ஒவ்வொரு குடிமகனும் தங்களின்அடிப்படைத் தேவைகளுக்காக, அரசைஅணுகுவதற்கும் அதற்கான இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் எவை என்பதையும் அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும், எப்படி பயன்படுத்தக்கூடாது என்பதையும் அறிந்திருக்க வகை செய்தல்வேண்டும்.ஒவ்வொரு குழந்தைக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் மீதான ஈர்ப்பு மற்றும் அக்கறையை உருவாக்க வேண்டும். அவர்கள்வரும் காலங்களில் சமூகத்தின் பால் ஈர்க்கப்பட்டு பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள்மற்றும் அடிப்படை உரிமைகளுக்காக ஒருங்கிணையும் மனப்பாங்கை வளர்க்க வேண்டும்.
சமூக அநீதிகளை குறிப்பாக லஞ்சம், ஊழல்போன்றவற்றை எதிர்த்து குரல் கொடுக்கவும் அரசியல் சட்டங்களின் படி தைரியமாகப் பேசவும், போராடுவதற்குமான மனப்பாங்கை வளர்க்க வேண்டும். எனவே இது குறித்த எளிமையான பயிற்சிகளையும் பாடத்திட்டத்தில் இணைத்து வழங்கவேண்டியது நமது ஜனநாயகக் கடமை ஆகும்.அதே போல பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் ஜாதி மத சிறுபான்மையினருக்கு சிறப்புக்கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதன் நோக்கம் போன்றவைப் பற்றிய புரிதலையும் இளைய சமுதாயத்திற்கு ஏற்படுத்த வேண்டியுள்ளது. அநீதிக்கு எதிராகவும், நீதிக்காகவும் இலவச சட்ட உதவி முகாம்களைப் பயன்படுத்துவது எப்படி என்பது போன்ற பாடங்கள் மற்றும் அதற்கான பயிற்சிகளையும் இன்னும் சேர்க்க வேண்டும்.
மனித உரிமைகள் பற்றிய அறிவையும் புரிதலையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் சாசனங்கள் ஏற்கெனவே வலியுறுத்தி வருகின்றன. அதன் அடிப்படையில் மனித உரிமைக் கல்விநிறுவனம் சார்பில் கடந்த இருபது ஆண்டுகளாக தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்கள்டாக்டர் வசந்திதேவி, திரு.எஸ்.எஸ்.ராஜகோபாலன் போன்ற பல்வேறு கல்வியாளர்களின் தலைமையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையிடம் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுஉரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் சுமார் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மாணாக்கரிடமும், மூவாயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களிடமும், சுமார் ஆயிரம் வரையிலான ஆசிரியர் பயிற்றுநர்களிடமும் இது குறித்த பல்வேறு கட்ட பயிற்சிகளையும் மனித உரிமைக் கல்வி நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது.
எனவே தமிழக அரசு முதற்கட்டமாக மனித உரிமைகளை வரைவுப்பாடத்திட்டத்தில் இணைக்க மேற்கொண்டிருக்கும் முயற்சி பாராட்டிற்கும் வரவேற்புக்கும் உரியதாகும்.இன்றைய இளைய தலைமுறையினருக்கு மனித உரிமைகள் பற்றிய புரிதலை உருவாக்கும்போது சமூகத்தில் நிலவும் கொலை, கொள்ளை, ஜாதி மத மோதல்கள் நீங்கி சமத்துவ சிந்தனையை உருவாக்க முடியும். சுயநலம் இல்லாத,பொது நலத்துடன் கூடிய சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக தலையீடு செய்யும்சிறந்த குடிமக்களை உருவாக்க முடியும் என்றுநம்புகின்றோம்.பாடத்திட்டம் குறித்த ஆலோசனை வழங்குவதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் கல்வியாளர்கள், அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும் பங்களிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.