அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த விசாரணையில் நேற்று ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட 13 பேர் தங்கள் வழக்கறிஞர்களுடன் விசாரணைக்கு ஆஜராகினர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட அருண்குமார், கணேசன் மற்றும் இரண்டு சிறார்கள் தரப்பில் மக்கள் கண்காணிப்பக இயக்கத்தின் நிறுவனரும், வழக்கறிஞருமான ஹென்றி தீபன் விசாரணையில் பங்கேற்றார்.
விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த ஹென்றி தீபன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனது கடமையைத் தவறிவிட்டதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் முறையாகப் பொருத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக பல் புடுங்கிய சம்பவம் நடைபெற்ற அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வெறும் 3 சிசிடிவி கேமராக்கள் மட்டுமே இருப்பதாகத் தகவல் அறிய உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்துள்ளது. எனவே அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நான் நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வழக்கறிஞர் ஹென்றி தீபன் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தனது உதவியாளர்களுடன் நேரடியாக ஆய்வுக்குச் சென்றார். அப்போது அவர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் அறை, வரவேற்பு அறை, கைதிகள் அடைக்கப்படும் அறை, கழிவறை என ஒவ்வொரு இடமாக ஆய்வு செய்தார்.