விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹென்றி திபேன், "இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனது கடமையை செய்ய தவறிவிட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக பொருத்தப்படவில்லை. குறிப்பாக சம்பவம் நடைபெற்ற அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வெறும் மூன்று சிசிடிவி கேமராக்கள் மட்டுமே இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்துள்ளது. எனவே, அம்பாசமுத்திரம் காவல் 4 நிலையத்தில் நான் நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறேன்" என்று கூறினார்.
இந்த நிலையில், வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று (ஏப்.18) அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தனது உதவியாளர்களுடன் நேரடியாக ஆய்வு செய்தார். காவல் நிலையத்தின் ஆய்வாளர் அறை, வரவேற்பு அறை, கைதிகள் அடைக்கப்படும் அறை. கழிவறை என அனைத்து இடத்திலும் ஆய்வு செய்தார். வழக்கறிஞரின் இந்த திடீர் ஆய்வால் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.