இலங்கை கடற்படைப் படகு மோதி உயிரிழந்த மீனவா் ராஜ்கிரணின் சடலம் நீதிமன்ற உத்தரவின்படி தோண்டி எடுக்கப்பட்டு வியாழக்கிழமை மறுஉடற்கூறாய்வு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த மீனவா்ள் ஆா்.ராஜ்கிரண் (30), எஸ். சுகந்தன் (30), ஏ. சேவியா் (32) ஆகியோா் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினா் தங்களது ரோந்து படகு மூலம் இடித்தனா்.
இதில், மீனவா்களின் படகு கடலில் மூழ்கியது. கடலில் தத்தளித்த சுகந்தன், சேவியா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இரு நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அக்.23ஆம் தேதி இலங்கையில் இருந்து ராஜ்கிரணின் உடல் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டு கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ராஜ்கிரணின் உடலில் காயம் இருப்பதால் இலங்கைக் கடற்படை அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அதனால் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் மறுஉடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீனவா் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா மனு தாக்கல் செய்தாா்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், மீனவா் ராஜ்கிரணின் உடலைத் தோண்டி எடுத்து மறுகூறாய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி, மணமேல்குடி வட்டாட்சியா் ராஜா முன்னிலையில் வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்ட சடலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தடயவியல் துறை மருத்துவா்கள் தமிழ்மணி, சரவணன் ஆகியோா் மறு உடற்கூறாய்வை மேற்கொண்டனா்.
சுமாா் இரண்டு மணிநேரத்தில் உடல் மீண்டும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, கோட்டைப்பட்டினம் கொண்டு செல்லப்பட்டு அதே இடத்தில் புதைக்கப்பட்டது.
உடற்கூறாய்வு அறிக்கை வரும் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது