தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் ஒரு நபர் நீதிபதி ஆணையம் விரைவில் அதன் விசாரணையை முடிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் வழக்கறிஞர் ஹென்றி கோரியுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது.
தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள்.
அந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
இந்த ஆணையம் மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.ஏற்கெனவே 28 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 1,053 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் 813 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,127 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் 1,150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளது, இதில் 1,127 ஆவணங்கள் மனுதாரர் தரப்பிலும், காவல்துறை சார்பில் 23 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 29ஆம் கட்ட விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் இன்று ஆஜரானார்.
ஆணைய நீதிபதி முன்னிலையில் நடந்த குறுக்கு விசாரணை யில் அவர் தமது தரப்பு விளக்கத்தை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக இன்னும் 400 பேரை விசாரணை செய்ய வேண்டும். ஆணையம் அதன் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். ஆட்சியர், கண்காணிப்பாளர், துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவு பிறப்பித்த அதிகாரிகள் இன்னும் விசாரிக்கப்படவில்லை. ஆணையத்தின் விசாரணையை விரைவில் முடித்து பாதிக்கபட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும், தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.