இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட சமயத்தில், தமிழ்நாட்டு மக்களிடையே ஓர் அசாதாரண சூழல் நிலவியது. அதேபோன்றதொரு பதற்றமான மனநிலைக்குத் தமிழக மக்களை தற்போதைய ஆட்சியாளர்கள் தள்ளிவிட்டுள்ளதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஒருசில நிகழ்வுகளில், போலீஸாரே வாகனங்களை தீயிட்டுக் கொளுத்துவதும், போராடிக்கொண்டிருந்த மக்களை குறிபார்த்துச் சுடுவதுமான கொடூரக் காட்சிகளைப் பார்க்கும்போது, போலீஸாரின் செயல்கள் சிங்கள ராணுவத்தினரை நினைவுப்படுத்துவதாகக் கூறுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வெளிப்படையாகவே மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மனித உரிமை ஆர்வலரும், போராட்டக் குழுவின் வழக்கறிஞருமான ஹென்றி திபேனை தொடர்பு கொண்டு பேசினோம்.