தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன்
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தூத்துக்குடியில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 29-வது கட்ட விசாரணையை இன்று தொடங்கியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பல தரப்பினர் அவர்களது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்தனர்.
அதனையடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இதற்கான, கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதனை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்தது. கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 29-வது கட்ட விசாரணையை இன்று தொடங்கியுள்ளது.