தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடிய்ல் மே 22, 2018ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதையடுத்து, மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் இந்த வழக்கை முடித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பேனர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வு முன்பு இன்று (செப்டம்பர் 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் சீல் வைத்த கவரில் அறிக்கையை தாக்கல் செய்தது. மேலும், அதை வெளியிடுவது குறித்து பிறகு முடிவெடுக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது. இதை சுட்டிக்காட்டி ஹென்றி திபேன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். போராட்டக்காரர்களின் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக தலைமை செயலாளருக்கும் டிஜிபிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழங்கியிருகிறது என்பதை சுட்டிக்காட்டினார். அந்த அடிப்படையில், அந்த அறிக்கையின் நகலை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும் மனுதாரருக்கும் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்கள். இந்த அறிக்கையைப் பெற்ற பிறகு தமிழக அரசு அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கடந்த 2018ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம், இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த ஒரு வடு என்று குறிப்பிட்ட நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கி காட்டக்கூடாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது. இது போல மீண்டும் ஒரு சம்பவம் நடக்கக்கூடாது எனவும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும் பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும் புலனாய்வுப் பிரிவு அறிக்கையையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.