முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவுச் செய்துள்ளது. இந்த ஓராண்டில் சட்டம் - ஒழுங்கைக் காப்பதில் அரசின் செயல்பாடுகள் எப்படி? நிறை, குறைகள் என்னென்ன? இனி செய்ய வேண்டியவை என்னென்ன? - இது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் காவல் சித்ரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கத்தின் (JA ACT) ஆலோசகரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேன்.
" 'ஜெய்பீம்' திரைப்படம் பார்த்துவிட்டு, கண்ணீர் வடித்ததாக கூறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த சமூகத்தில் தொடர்ந்து காவல்துறையினரின் சித்ரவதைகளுக்கு ஆளாகி வரும் குறவர், இருளர் சமூகங்களுக்கு எதிரான அநீதிகளின்போது நடவடிக்கை எடுக்காதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்ற நாட்களிலிருந்து கல்வித் துறை, பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், விவசாயம், நீர்வளத்துறை, சோலார் எனர்ஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய முயற்சிகளையும், திட்டங்களையும் மேற்கொண்டார். அதேவேளையில், முதல்வர் தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் அதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வராதது ஏன்? இப்படி பல்வேறு கேள்விகள் எழுகின்றன. காவல்துறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டாலும் கூட, ஏற்கெனவே காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மிகச் சரியாக பின்பற்றவாவது உத்தரவிட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.