காவல் நிலையத்தில் ராஜசேகர் மரணமடைந்ததை சென்னை உயர்நீதிமன்றமும், மாநில மனித உரிமைஆணையமும் தாமாக முன்வந்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அறிக்கை.
கொடுங்கையூர் காவல்நிலையத்தில் உயிரிழந்த ராஜசேகரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும், சம்பவத்தன்றே காவல்துறை இயக்குநர் தலையீடு செய்து இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, வழக்குப்பதிவு செய்ததை வரவேற்பதாகவும், தமிழக காவல்துறை வரலாற்றில் இந்த நடவடிக்கைகள் முதன் முறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பைப் பின்பற்றி நடவடிக்கை எடுப்பதை மக்கள் கண்காணிப்பகம் பாராட்டுகிறது எனவும், ராஜசேகர் காவல் மரணத்தின் தொடர்புடைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் சார்பு ஆய்வாளர் கன்னியப்பன் தலைமை காவலர் ஜெயசேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதை மக்கள் கண்காணிப்பகம் பாராட்டுவதாகவும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் ஏற்கனவே மாநில மனித உரிமை ஆணையத்தால் அவருக்கு எதிராக பரிந்துரை பெறப்பட்டுள்ளதோடு, மேலும் மற்றுமொரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் குற்றவாளியாக இருக்கிறார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக் கூடாது என்ற காவல்துறை இயக்குனரின் உத்தரவை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடைபிடிக்க மாட்டாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்த மரணத்திற்கு காவல் ஆணையர் சங்கர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
....................................