செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படை அந்த சிறுவனை கைதுசெய்த ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த சிறுவனை காவல்துறை யினர் செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். பின்னர் அந்த சிறுவனை தாயார் சந்தித்துப்பேசிய நல்ல உடல்நிலையோடு இருந்தான். இந்நிலையில் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கோகுல்ஸ்ரீ படு கொலை செய்யப்பட்டுள்ளான். இதற்கு சான்றாக உடலின் பல இடங்களில் கொடுங்காயங்கள் இருப்பதை மக்கள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்து புலன் விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டிக்கு இந்த வழக்கை அரசு மாற்றியுள்ளது. இந்த சிறுவன் மட்டுமல்ல அந்த கூர்நோக்கு இல்லத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இது போன்ற சித்திரவதைகள் நடந்து கொண்டே உள்ளது. அந்த இல்லத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளின் சட்டைகளை கழற்றிப் பார்த்தால் அவர்களுக்கும் காயங்கள் இருப்பது தெரியும். ஆகவே இந்த வழக்கிற்கான விசாரணை நடை பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், சிறுவனின் மரணத்திற்கு காரணமானவர்கள் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். சாட்சிகளை மிரட்டிவரும் செங்கல் பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து சிறுவன் கோகுல்ஸ்ரீ கொல்லப்பட்ட போது உடன் சித்திரவதைக்குள்ளான 4 சிறார்களின் காயத்தையும் மருத்துவக்கு குழுவுடன் ஆய்வு செய்யவேண்டும். அதிகாரி சிவக்குமாரின் மிரட்டலுக்கு உள்ளான சிறுவனின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தனி குழு ஒன்றை நியமனம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூர்நோக்கு இல்லங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கேட்டுக் கொண்டுள்ளார்.