சிறுபான்மையினர் மீது வெறுப்பை விதைக்கும் சங்பரிவார் இயக்கங்கள்” - திருமாவளவன் குற்றச்சாட்டு
இந்தியாவில் சிறுபான்மையினர் மீது சங்பரிவார் இயக்கங்கள் வெறுப்பை விதைக்கின்றன என திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை, கேகேநகரில் உள்ள நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கில், மக்கள் நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் இன்று மதநல்லிணக்க மாநாடு நடந்தது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: “திருப்பரங்குன்றத்தில் இந்த மாநாட்டை நடத்த அனுமதி கேட்கவில்லை. மதுரை மாநகருக்குள் நடத்த அனுமதி கேட்டும் போலீசார் கொடுக்காதது அதிர்ச்சியளிக்கிறது. மத நல்லிணக்கத்தை விரும்பும் ஆட்சி தமிழகத்தில் நடந்தும், முதல்வர் இருந்தும் அனுமதி வழங்காதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடு முதல்வர் மதவாத சக்திகளை எதிர்த்து போராடி வருகிறார் அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மதுரை மாநகர காவல்துறை மற்றும் ஆட்சி நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.
.................................................................................
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசுக்கு ஆதரவாக, எதிராக செயல்படும் பிரிவுகளும் உண்டு. ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எந்த மேடையிலும் முன்னால் இருக்க மாட்டார்கள். ஆனால், அதிகார வர்க்கத்தில் உள்ள டாக்டர்கள், சினிமா, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை சந்தித்து மூளைச் சலவை செய்து வருகின்றனர். 24 மணிநேரமும் இதை செய்து அதிகாரிகளையும் மாற்றும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இது மதுரையில் நடந்த பிரச்சினையாகச் சொல்லவில்லை. நாடு முழுவதும் நடக்கிறது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றால் மத நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்” இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
