கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டவர்களின் பற்களை அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. கட்டிங் பிளையரை வைத்து பிடுங்கியதாக கூறப்படும் சம்பவம் பற்றிக் குறிப்பிட்ட ஹென்றி, பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை தாங்கள் பெற்றுவருவதாகவும், நடந்த விவகாரம் என்ன என்பது தெளிவாகத் தெரிவதாகவும் கூறினார்.
"சாத்தான்குளம் போல ரத்தக்கறையை சுத்தம் செய்தார்கள்"
“இதில் பல்பீர் சிங் மட்டுமே பிரச்சனை அல்ல. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகிய அனைவருமே கவனக்குறைவாக இருந்துள்ளனர். இது மார்ச் 10ம் தேதி நடந்தது. 26-ம் தேதி அவர்கள் பெயிலில் வந்து பேசும்வரை ஏதும் எங்களுக்குத் தெரியாது என்று சொல்வதை எப்படி நம்ப முடியும்? அவர்கள் அனைவரும் சேர்ந்து நடந்ததை மூடிமறைத்தார்கள். மீடியாவில் வந்துவிட்டது. நாங்கள் எல்லாம் தலையிடுகிறோம் என்று தெரிந்தவுடன், தற்போது தங்கள் நிலையை மாற்றிக்கொள்கிறார்கள். சாத்தான்குளத்தில் ரத்தக் கறையை சுத்தம் செய்ததைப்போல இங்கேயும் ரத்தக்கறையை சுத்தம் செய்திருக்கிறார்கள். ஆனால், மேஜிஸ்திரேட் என்ன செய்தார்? இரவு 11.30க்கு பாதிக்கப்பட்ட நபர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கு போலீஸ் அழைத்துவந்தபோது, அவர்கள் வாயில் ரத்தம் ஒழுகுவது, காயம் இருப்பது இதையெல்லாம் பார்த்திருக்கமாட்டாரா? ரிமாண்ட் வழக்குரைஞர் ஒருவர் இருப்பார் அவர் பார்த்திருக்கமாட்டாரா? எல்லா காவல் நிலையத்திலும் சிசிடிவி கேமிராக்கள் 24 மணி நேரமும் இருக்கவேண்டும். அதில் பதிவாகும் ஆடியோ, வீடியோ இரண்டும் 18 மாதத்துக்குப் பாதுகாக்கப்படவேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது. அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தின் சிசிடிவி கேமிராவை மாவட்ட ஆட்சியரால் பார்க்க முடியவில்லையா? மாவட்ட போலீஸ் புகார் அத்தாரிட்டியின் தலைவர் என்ற முறையில் அவர் என்ன செய்தார்? காவல் கண்காணிப்பாளருக்கு அம்பாசமுத்திரம் உட்கோட்டத்தில் தனிப்பிரிவு கான்ஸ்டபிளே இல்லையா. காவல் நிலையத்தில் இவ்வளவும் நடப்பதை காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை அளிக்கவேண்டியது அவரது வேலைதானே. அவர் தரவில்லையா? எனவே, இது முழு அமைப்பும் சம்பந்தப்பட்டது” என்றார் ஹென்றி டிஃபேன்.