கடந்த 12 ஆண்டுகளாக நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என அலையாய் அலைந்து திரிந்து இந்த தீர்ப்பை பெற்றிருக்கிறார் கல்லுமண்டையன் தாயார் குருவம்மாள். இது தொடர்பாக விவரம் வருமாறு;
கல்லுமண்டையன்
கவியரசு, முருகன் என்ற கல்லுமண்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இராமநாதபுரம் சாலை செக்போஸ்ட் அருகே, அப்போதைய காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளதுரையால் கடந்த 16.02.2010 ஆம் தேதியன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து கல்லுமண்டையனின் தாயார் குருவம்மாள் மனித உரிமை செயற்பாட்டக அமைப்பான, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிறுவனர் ஹென்றி திபேனிடம் இது குறித்து முறையிட்டு சட்ட உதவி கோரினார்.
12 ஆண்டுகளாக
இதனிடையே கடந்த 14.02.2010 அன்று நள்ளிரவில் வீடு புகுந்த சீருடை அணியாத 6 காவலர்கள், உன் மகன் எங்கே எனக் கேட்டு சித்ரவதை செய்ததோடு, வாய் கூசும் அளவிற்குக் கெட்ட வார்த்தைகளால் தன்னை திட்டியதாக தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எழுத்துப்பூர்வ புகார் மனு அளித்திருந்தார். மேலும், மக்கள் காணிகாணிப்பகம் அமைப்பின் வழக்கறிஞர்கள் அளித்த சட்ட உதவிகளை கொண்டு 12 ஆண்டுகளாக நீதிமன்றம், மனித உரிமை ஆணையம் என மகனின் என்கவுண்டருக்கு நீதி கேட்டு நடந்தார் குருவம்மாள்.