இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களிடம் இக்குழுவினர் தெரிவித்தது:
ஜெகநாதன் மீது ஏற்கெனவே தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கூட்டுச்சதி உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கல் குவாரிகள் செயல்படுவதற்கான அனுமதி குறித்து, குவாரிகளின் முன்பு எந்த விவரமோ, அறிவிப்போ இல்லை. இது மிகப்பெரிய சட்டவிரோதம். ஆட்சியர் சொல்லும் பட்டியலை மட்டுமே ஏற்காமல், சுதந்திரமாக செயல்படக்கூடிய சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து, அனுமதி பெறாத கல் குவாரிகள் குறித்து தமிழக முதல்வரே நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். குவாரிகளில் 350 அடிக்கு மேல் பாதாள குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அனுமதி அளிக்கப்பட்ட அளவை மீறி வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுகின்றன. எனவே, கரூர் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரிகள் குறித்தும், அனுமதி பெற்ற கல் குவாரிகள் செய்யும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் நிபுணர் குழு அமைத்து விசாரித்து, வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கரூரில் செயல்படும் சட்ட விரோத கல் குவாரிகள் குறித்த எங்களின் ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். சட்டப்பேரவையில் இது குறித்து விவாதிக்கப்படும். ஜெகநாதன் குடும்பத்துக்கு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.