ஆட்சிகள் மாறினாலும் காவல்துறை அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் மரணங்கள் எனத் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறும் மதுரை மக்கள் கண்காணிப்பகம், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 10 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த 07-01-2021-ல் சென்னை எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் சூர்யா, 03-4-21-ல் சேலம் ஆத்தூர் காவல் நிலையத்தில் ராஜாமணி, 07-07-21 கோயம்புத்தூர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இந்திர பிரசாத், 24-08-21-ல் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் சத்தியவாணன், 04-09-21-ல் நாமக்கல் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் மணிகண்டன், 12-12-21-ல் இராமநாதபுரம் கீழத்தூவல் காவல் நிலையத்தில் மணிகண்டன், 13-01-22 நாமக்கல் கிளைச்சிறையில் பிரபாகரன், 05-02-22 திருநெல்வேலி ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் சுலைமான், 14-02-22 திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் தடிவீரன், 18-04-22 சென்னை தலைமைச்செயலகக் குடியிருப்பு காவல் நிலையத்தில் விக்னேஷ் என 10 காவல் நிலைய மரணங்களைத் தெரிவித்துள்ளனர்.
`ஜெய் பீம்' படத்தைப் பார்த்து வருத்தப்பட்டு மிசா காலத்தில் தான் பாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து பதிவு செய்த முதலமைச்சர், அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் இதுபோன்ற காவல் நிலைய மரணங்கள் நிகழாமல் இருக்கவும், அப்பாவிகள் காவல்துறையினரால் பாதிக்கப்படாத வகையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வரவும் வேண்டும் என்பதே சமூகச் செயற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.