for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

இந்தியாவில், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பாலிவுட், டோலிவுட் எனத் திரைப்படத்துறைக்குள் போதைப்பொருள் புழங்கும் செய்திகளும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

குறிப்பாக, மும்பை சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக்கூறி பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன்கான் கடந்த அக்டோபர் 3-ம் தேதி தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் (NCB) கைதுசெய்யப்பட்டார். ஆர்யன் கான்மீது போதைப்பொருள் மற்றும் மனநோய் மருந்துகள் சட்டத்தின் கீழ் (Narcotic Drugs and Psychotropic Substances Act (NDPS), 1985) பிரிவு 8(c), 20(b), 27, 35 ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கு விசாரணையின் ஒவ்வொரு நாளும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. தற்போது ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து, மனித உரிமைச் செயற்பாட்டாளரும், மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநருமான ஹென்றி திபேனிடன் பேசினோம்.

``ஆர்யன் கான் போன்ற பணக்காரக் குடும்பத்து இளைஞனை விடுங்கள், சாதாரண ஏழைக் குடும்பத்து இளைஞர்களும் இப்படித்தான் தினமும் கைதாகிறார்கள். அவையெல்லாம் வெளியில் தெரிவதில்லை.

 

இன்றைக்கு நகர்ப்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை சாதாரணமாகவே பள்ளிக் கல்லூரிகளின் வளாகத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நம்முடைய இளம் சமுதாயத்தைச் சீரழிக்கக்கூடிய இந்த நடைமுறைகள் பெரும்பாலும் காவல்துறையின் கண்முன்னே நடக்கிறது என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. இதில், ஏதேனும் ஒரு சூழ்நிலையில், காவல்துறையினர் யாரையாவது பிடித்துவிடுகிறார்கள். அவர்களிடம் `Commercial Quantity' அளவுக்கு Narcotics Content இருந்தாலோ அல்லது இருந்தது என காவல்துறையால் சொல்லப்பட்டாலோ, நிரூபிக்கக்கூடத் தேவையில்லை. அவர்களைத் தூக்கி சிறையிலடைக்கலாம். ஜாமீன்கூட கிடைக்காது, அவர்கள் சிறையிலேயே ஒழியவேண்டியதுதான். இதுதான் இப்போதிருக்கிற கொடூரச் சட்டம்.

இப்படி, போதைப்பொருள் சார்ந்திருக்கக்கூடிய விஷயங்களில், வெறும் தண்டனைக்குரிய வழக்காக வைத்து மட்டும், நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று, ஆறு ஆண்டுகளாக வழக்கு நடத்தி, விடுதலை பெறக்கூடிய நிலை இருப்பது சரியல்ல. பயன்படுத்தியவர்கள், பாதிக்கப்பட்டவர்களை விடுத்து, போதைப்பொருள் விற்பனையாளர்கள், புரோக்கர்கள் உள்ளிட்டோரைக் கைதுசெய்து தண்டனை வழங்க வேண்டும்.

குறிப்பாக, போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை குற்றவாளிகளாகக் கருதி சிறைத் தண்டனை வழங்காமல், பாதிக்கப்பட்டவர்களாகக் கருதி மறுவாழ்வு மையங்களில் கட்டாய சிகிச்சை அளிக்க வேண்டும். அந்த மறுவாழ்வு மையமும் மற்றொரு சிறைச்சாலை போன்று அல்லாமல் பயிற்சிபெற்ற, நிபுணத்துவம் பெற்ற ஆலோசனையாளர்கள் (Counsellor), மனநல மருத்துவர்கள் (Psychiatrist), சமூக ஆர்வலர்களால் (Social Activist) நடத்தப்படுகிற, ஓர் உண்மையான மறுவாழ்வு மையமாக இருக்க வேண்டும்.

நாங்கள் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக நினைக்க வேண்டாம்; அந்தக் கொடிய பழக்கத்திலிருந்து அவர்களை முற்றிலுமாக விடுவிக்கக்கூடிய உண்மையான தீர்வைத் தேடுகிறோம். எனவே, சிறைக்கு மாற்றாக மறுவாழ்வு மையம் (Rehabilitation Centre) தேவை என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. இந்தப் பரிந்துரை நிச்சயம் வரவேற்கக்கூடிய ஒரு விஷயம்" என்றார்.

இன்றைய சூழலில், திரைத்துறை மட்டுமின்றி, பெரிய வி.ஐ.பி குடும்பத்தினர் முதல் சாதாரண குடிசைவாழ் இளைஞர்கள் வரையிலும் போதைப்பொருள் நுகர்வு கலாசாரம் ஊடுருவிவருகிறது. அரசு உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறினால் சட்ட, ஒழுங்கு பிரச்னை ஏற்படும். சமூகச் சீர்கேடுகள் தலைதூக்கும். இந்தியாவின் மிகப்பெரிய வளமாக இருக்கும் இளைஞர் சக்தி வீண் விரையமாகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்துவருகின்றனர்.

Full Media Report



Join us for our cause