for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தருமபுரி, டிச.12- ஆந்திராவில் தமிழக பழங்குடியின தொழிலாளர்கள் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் தலையிட்டு உரிய விசாரணை உறுதி செய்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என மக்கள் கண்காணிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.  தருமபுரி மாவட்டம், சித்தேரி மலைப்  பகுதியைச் சார்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்த, இடைத்தரகர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம்  இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதில் ஒருவரது உடல் சித்தேரி மலைப்பகுதியில் வீசப்பட்டு கிடந்தது. மேலும்  மற்றொருவர் ஆந்திர மாநிலத்தில் அடையாளம் தெரியாதவாறு அடக்கம் செய்யப்பட்டார்.  

இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பு மையத்தின் உண்மை அறியும் குழுவினர் ஆந்திரப் பகுதிக்கு சென்று  உண்மையை அறிந்து அறிக்கையை தயார் செய்துள்ளனர். இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு தருமபுரியில் முத்து இல்லத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் கண்காணிப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் கூறுகையில், ஆந்திர மாநிலத்தில் தருமபுரி மாவட்ட சித்தேரியை சார்ந்த  ராமன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் திட்டமிட்டு  கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் இவர்களின் மனைவி, குழந்தை மற்றும் குடும்பத்தினர் ஆதரவில்லாமல் நிர்க்கதியாக நிற்கிறார்கள்.  தமிழ்நாடு முதலமைச்சர் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற, காவல்துறை சித்திரவதையை, ஜெய்பீம் படத்தின் மூலம் அறிந்து கண்ணீர் சிந்தி இருளர் இன மக்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். இந்த செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களும், மலைவாழ் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் என்பதை  முதல்வருக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.  மேலும், தருமபுரி, சேலம், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடி இன மக்களாக இருந்தாலும், வேறு சமூகமாக இருந்தாலும் தங்களது கிராமங்களை விட்டு பிழைப்பிற்காக வெளியூர் செல்லும் நிலை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த ராமன், பாலகிருஷ்ணன் ஆகிய இரு குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக்கூடிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு இருக்கிறது. ஆந்திரா மாநிலத்தில் வாழக்கூடிய மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்த அரசுக்கு உண்டு.  இந்த அப்பாவி மலைவாழ் பழங்குடியின மக்களை ஆசை வார்த்தைகளை கூறி, இடைத்தரகர்கள் இந்த தொழி லுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இந்த  இடைத்தரகர்கள் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இடைத்தரகர்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள், ஆந்திர மாநிலத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இருவர் சடலமாக மர்மமான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களின் இறப்பிற்கு உரிய காரணத்தை காவல்துறை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.  தமிழக காவல்துறையில் எத்தனையோ உளவு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்த இடைத்தரகர்களை கண்டுபிடிப்பதில் ஏன் இவ்வளவு மெத்தனம் என தெரியவில்லை. மேலும், இந்த சித்தேரி உள்ளிட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் இந்த தொழிலுக்கு செல்வதை நிரந்தரமாக தடுப்பதற்கு உடனடியாக மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட, அந்த மலை பகுதியிலே தொழில் மற்றும் வேலைவாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். கடப்பா சிறையில் இருப்பவர்களை, இலவச சட்ட பணிகள் குழுவினர் முன்வந்து, பிணையில் எடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஹென்றி கிபேன் தெரிவித்தார்.  இந்த சந்திப்பின் மக்கள் கண்காணிப்பகம் மாவட்ட அமைப்பாளர்‌ கே.பி.செந்தில்ராஜா மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனிருந்தனர்.

Full Media Report



Join us for our cause