ஆந்திரத்துக்கு செம்மரம் வெட்ட செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் நிா்வாக இயக்குநா் ஹென்றி டிபேன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்துத் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தருமபுரி மாவட்டம், சித்தேரியில் உள்ள மலைவாழ் பழங்குடி மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை. இதனால், அந்த பகுதியைச் சோ்ந்த சிலா் இடைத்தரகா்களின் ஆசை வாா்த்தையை நம்பியும், ஏமாற்றப்பட்டும் ஆந்திர மாநிலத்துக்கு செம்மரங்கள் வெட்ட செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆந்திர வனத் துறையால் கொல்லப்பட்டனா்.
இதுகுறித்துத் தருமபுரி மாவட்ட காவல்துறை, மாவட்ட நிா்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலவச சட்ட மையமும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளாது ஏன் என தெரியவில்லை. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இருளா் இன மக்களின் துயரத்தை அறிந்து அவா்களுக்குத் தேவையான நலத் திட்ட உதவிகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறாா். அதேபோல் தருமபுரி மாவட்டம், சித்தேரியில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதர மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுத்து செம்மரம் வெட்டுவதற்கு செல்லும் நிலையைத் தடுக்க வேண்டும்.
அண்மையில் சித்தேரியைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தது தொடா்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஆந்திர மாநில சிறையில் உள்ளவா்களை, ஜாமினில் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்