மதுரை/சென்னை: வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வாங்கியதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக மக்கள் கண்காணிப்பகம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
மதுரையில் கடந்த 1985 முதல்மக்கள் கண்காணிப்பகம் (பீப்பிள்ஸ் வாட்ச்) என்ற தொண்டுநிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனம் சார்ந்த சிபிஎஸ்சி என்ற அறக்கட்டளை வெளிநாடுகளில் இருந்து நன் கொடைகள் என்ற பெயரிலும், பிற வகையிலும் நிதியைப் பெற்று சமூக சேவைகளில் ஈடுபடுகிறது.
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் சிபிஎஸ்சி அறக்கட்டளை அனுமதி பெறாமல் சில முறைகேடுகளில் ஈடுபட்டதும், இதன்மூலம் கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றிருப்பதாகவும் புகார் எழுந்தது.
மத்திய உள்துறை அமைச்சகம் நடத்திய ஆய்வில் ரூ.1 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பது தெரிகிறது. இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதையடுத்து மக்கள் கண்காணிப்பகம், அந்நிறுவனம் சார்ந்த சிபிஎஸ்சி அறக்கட்டளை மீதும் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரிப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
இதனிடையே மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன் சமூக வலைதளத்தில் இதுபற்றி கூறியிருப்பதாவது:
‘‘கடந்த 2008-2012-ம் ஆண்டு கணக்கை எங்களது அலுவலகத்தில் 2 தினங்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் விதிமீறல் எதுவுமில்லை. கணக்குகளை சரியாக வைத்துள்ளோம். பழி வாங்கும் நோக்கில் செயல்படுகின்றனர். எங்களது பணியை முடக்க முடியாது. மனித உரிமை, பணிகள் தொடரும்’’ என்றார்.
சிபிஐ சோதனைக்கு கண்டனம்
மக்கள் கண்காணிப்பகத் தொண்டு நிறுவனத்தில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மக்கள்கண்காணிப்பகம் நிறுவனத்தில் நேற்றைய தினம் மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) நடத்திய சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்த நோக்கத்துக்காக சிபிஐ சோதனைகள் நடத்தியதோ அதுகுறித்து ஏற்கெனவே சோதனைகள் நடத்தப்பட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சிபிஐ சோதனை நடத்தியிருப்பது தேவையற்ற நடவடிக்கை ஆகும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களை மிரட்டும் நோக்கத்துக்காகவே இச்சோதனைகள் நடைபெற்றுள்ளன என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற மிரட்டல் நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளின் அடிப்படையில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை முடக்கிவிட முடியாது என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். ஆனால் சிபிஎஸ்சி அறக்கட்டளை அனுமதி பெறாமல் சில முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றிருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.