மதுரை: வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள 'People's Watch' தொண்டு நிறுவனம் மீது எட்டு பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற வேண்டும் என்றால் அவை மத்திய அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி இதற்கான உரிமத்தைப் பெற வேண்டும்.
அப்படி விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட நாட்டில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கான அனுமதியை இழந்தது.
FCRA அனுமதி
வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்த நமது நாட்டில் Foreign Contribution (Regulation) Act என்ற சட்டம் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நன்கொடைகள் உள்நாட்டு பாதுகாப்பைப் பாதிக்காது என்பதை இச்சட்டம் உறுதி செய்கிறது. இந்த FCRA அனுமதி ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். சமூக, கல்வி, மத, பொருளாதார மற்றும் கலாசார நோக்கங்களுக்காக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறலாம். இந்த நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயம் வருமான வரி சட்டத்தின் கீழ் ஆண்டு வருமானத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.
மதுரை தொண்டு நிறுவனம்
இந்நிலையில், CPSC அறக்கட்டளையின் கீழ் 'People's Watch' என்ற தொண்டு நிறுவனத்தின் தலைமையிடம் மதுரையில் உள்ளது. இந்த தொண்டு நிறுவனம் குழந்தைகள், முதியவர்கள், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு உதவிகளைச் செய்து வருகின்றன. கடந்த 1985ஆம் ஆண்டு முதல் இந்த தொண்டு நிறுவனம் செயல்படு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நன்கொடைகளைக் கொண்டு பல்வேறு காப்பகங்களையும் அந்த அமைப்பு நடத்தி வருகிறது.
முறைகேடு?
இருப்பினும், வெளிநாட்டு நிதிகளைப் பெறுவதற்கான விதிமுறைகளை CPSC அறக்கட்டளை பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட கோடிக்கணக்கான நிதியில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்ந்து இந்த அறக்கட்டளை கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பெற்ற வெளிநாட்டு நன்கொடைகளை உள் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிபிஐ
அதில் 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட வெளிநாட்டு நிதியில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதும் வெளிநாட்டு நன்கொடை பெற அனுமதி பெறவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து இது தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு சிபிஐ அமைப்பிற்கு உள் துறை அதிகாரிகள் பரிந்துரைத்தனர். அதன் அடிப்படையில் சிபிஐ சார்பிலும் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
8 பிரிவுகளில் வழக்கு
சிபிஐ விசாரணையில் மேலும் 2005-2006, 2010-2011 மற்றும் 2012-2013 ஆண்டுகளிலும் மத்திய அரசு அனுமதியில்லாமல் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து CPSC அறக்கட்டளை மற்றும் 'People's Watch' தொண்டு நிறுவனம் மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது