புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து அக்டோபர் 18-ம் தேதி, சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகிய மூன்று மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 19-ம் தேதி 17 மைல் நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, மீனவர்களின் படகை இடித்துச் சேதப்படுத்தியதில் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது. இதில், மீனவர் ராஜ்கிரண் மாயமானார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், நெடுந்தீவு அருகே கடந்த மாதம் 20-ம் தேதி மீனவர் ராஜ்கிரணை இலங்கை கடற்படையினர் சடலமாக மீட்டனர். மீனவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ராஜ்கிரணின் உறவினர்கள் அவர் கடலில் மூழ்கி இறக்கவில்லை. இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்று குற்றம்சாட்டினர். மேலும், அவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். இதற்கிடையே, கடந்த மாதம் 23-ம் தேதி ராஜ்கிரணின் உடலை இலங்கை கடற்படையினர், இலங்கையில் உடல் கூறாய்வு செய்துவிட்டு, கோட்டைப்பட்டினத்துக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து, அவர் உடல் மறு உடல் கூறாய்வு செய்யப்படாமல் கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இறந்த ராஜ்கிரணின் மனைவி பிருந்தா, தன் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ராஜ்கிரணின் உடலை மறு உடல் கூறாய்வு செய்ய வேண்டும் என, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜ்கிரண் கடலில் மூழ்கி இறந்தாரா அல்லது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்தாரா என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், நவம்பர் 18-ம் தேதி ராஜ்கிரணின் பிரேதத்தை மறு உடல் கூறாய்வு செய்து, அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் வரும் 24-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்பேரில் நேற்றிரவு, ஓய்வுபெற்ற தடயவியல்துறை பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ், மணமேல்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மணமேல்குடி வட்டாட்சியர் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் ராஜ்கிரணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. அதையடுத்து, மீண்டும் ராஜ்கிரணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.