மதுரை:புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீனவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கோட்டைப்பட்டினம் பிருந்தா தாக்கல் செய்த மனு: என் கணவர் ராஜ்கிரண் அக்., 18ல் சிலருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார். படகு மீது இலங்கை கடற்படை மோதி சேதப்படுத்தியது. ராஜ்கிரண் கடலில் மூழ்கி இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின் அவரது உடல் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.கணவரை இலங்கை கடற்படை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்; மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு:
ராஜ்கிரண் உடலை நவ., 18ல் கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி., மணமேல்குடி தாசில்தார் முன்னிலையில், தஞ்சாவூர் அரசு மருத்துவமனை டாக்டர் சரவணன், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் தமிழ்மணி மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.மனுதாரர் தரப்பில், ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர் சேவியர் செல்வ சுரேஷ் உடன் இருக்கலாம். அரசுத் தரப்பில் வரும் 24ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.