தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ம் ஆண்டுநடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம்தொடர்பாக தேசிய மனித உரிமைஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. பின்னர் இதுதொடர்பாக மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு அளித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த வழக்கை முடித்து வைத்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த மனித உரிமைசெயற்பாட்டாளரான ஹென்றி டிபேன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பு மற்றும் தேசிய மனிதஉரிமை ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீலிடப்பட்ட அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரப்பட்டது.
தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த அறிக்கையை ஆய்வு செய்தநீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக தலைமைச் செயலாளருக்கும் டிஜிபிக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது என சுட்டிக்காட்டினர்.
இந்த அறிக்கை நகலை, தமிழகஅரசின் தலைமை வழக்கறிஞருக்கும், மனுதாரருக்கும் வழங்க மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர்ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கையை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என அறிவுறுத்தினர்.
இதுபோல் இனி நடக்கக் கூடாது
மேலும், கடந்த 2018-ம் ஆண்டுநடந்த இந்த சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு நிர்வாகத்தில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், மீண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கக் கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
அத்துடன் தேசிய மனித உரிமைஆணைய பரிந்துரைப்படி, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், சிபிஐ விசாரணை மற்றும் நீதிபதிஅருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின்அறிக்கை, தேசிய மனித உரிமைஆணைய புலன் விசாரணைக்குழு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.