சூழலியல் போராளி முகிலன் காணாமல் போய் 7 நாள்கள் ஆன நிலையில், அவரை மீட்டுத்தரக் கோரி சமூக இயக்கங்களின் கூட்டமைப்பு சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளது .
சுற்றுச்சூழல் போராளியான முகிலன் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுக்கு காரணம் சில காவல்துறை உயரதிகாரிகள்தான் என்றும், காவல்துறை, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், அதற்கான வீடியோவையும் ஆவணங்களையும் அண்மையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு எழும்பூர் ரயில் நிலையம் வந்த முகிலன் காணாமல் போனார்.