மத நல்லிணக்க குழுக்களை ஏற்படுத்த வேண்டும்
மக்கள் கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம்
மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாநாடு நடைபெற்றது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சு. வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், என் இறைவனுக்கும். என்னுடைய மதத்திலும் என்னென்ன மாதிரி வழிபாடு நடத்த வேண்டும் என்ற தனி மனித உரிமையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் கருதாமல், சமூக பிரச்சினையாக கருத வேண்டும். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டும் என்று பேசினார்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திரு மாவளவன், வழக்கறிஞர் ஹென்றி டிஃபேன்,. மீ.த.பாண்டியன், மதிமுக நிர்வாகி செந்தில் அதிபன், ஆயர் லாரன்ஸ் பயஸ், சுப.உதயகுமார், முன்னாள் எம்எல்ஏ முருகவேல்ராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
மாநாட்டில், தமிழர்களின் குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் வழிபாடு, நாட்டார் மரபின் கருப்பு வழிபாடு, சமண வழிபாடு. ஆதி தமிழ்ச் சமூகத்தின் கொற்றவை வழிபாடு, சைவ வழிபாடு, இஸ்லாமியர்களின் தர்கா வழிபாடு என கூட்டு வழிபாட்டு இடமாக திருப்பரங்குன்றம் மலை இருக்கிறது. இதை மத நல்லிணக்க மலையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
மத நல்லிணக்கத்தை பாதுகாக்க மதுரை மாநகர், புறநகர், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மத நல்லிணக்க குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
