for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கொலை வழக்கு

இன்று சடலத்தைத் தோண்டி எக்ஸ்ரே எடுக்க உத்தரவு

சுரங்கத் துறை அதிகாரி பணியிலிருந்து விடுவிப்பு

 

சமூக செயற்பாட்டாளர் ஜகபர்அலி கொலையைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட புவியியல். சுரங்கத் துறை உதவி இயக்குநர் ஏ.லலிதாவை பணியில் இருந்து விடுவித்தும், வேலூர் மாவட்ட உதவி இயக்குநர் எம். பாண்டியராஜனை கூடுதல் பொறுப்புக்கு நியமித்தும், அந்தத் துறையின் ஆணையர் இ. சரவண வேல்ராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டார். லலிதாவின் மாற்றுப் பணி குறித்து பின்னர் தனி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டது.

 

மதுரை, ஜன. 30: புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜகபர் அலிகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், அவரது சடலத்தை வெள்ளிக்கிழமை (ஜன.31) தோண்டி எடுத்து, எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், வெங்களூரைச் சேர்ந்த மரியம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

சமூக ஆர்வலரான எனது கணவர் ஜாபர் அலி, கடந்த 17-ஆம் தேதி காட்டுபாபா பள்ளிவாசலில் தொழுகை முடித்து வெளியில் வந்தார். அப்போது, அவர் மீது லாரியை மோதச் செய்து கொலை செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை ஜகபர் அலி நடத்தியுள்ளார். இந்த குவாரிகளால் அரசுக்கு ரூ.840 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போராட்டத்துக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், எனது கணவரை சமூக விரோதிகள் லாரி ஏற்றிக் கொலை செய்து விட்டனர். எனது கணவரின் சடலத்தை கடந்த 18-ஆம் தேதி கூறாய்வு செய்தனர். இதை விடியோ பதிவு செய்யக் கோரிய எங்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையைத் தராமல் 10 நாள்கள் கால தாமதப்படுத்தினர். எனது கணவரின் சடலம் உரிய விதிகளைப் பின்பற்றி கூறாய்வு செய்யப்படவில்லை.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டாலும், அவர்கள் முதல் தகவல் அறிக்கையை எங்களுக்கு வழங்கவில்லை. 20 கி.மீ. தொலைவில் தடய அறிவியல் பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகள் உள்ளன. அதை விடுத்து, திருமயம் அரசு மருத்துவமனையில் சடலத்தை கூறாய்வு செய்ததும், காவல் துறையினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து போதுமான தடயங்களைச் சேகரிக்கத் தவறியதும் வழக்கு விசாரணை சரியான திசையில் செல் லுமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, எனது கணவர் ஜகபர் அலியின் சடலதைத் தோண்டி எடுத்து, இரண்டு தடய அறிவியல் நிபுணர்களோடு, எங்களது நிபுனரையும் இணைத்து, எக்ஸ்ரே எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஜகபர் அலியின் சடலத்தைக் கூறாய்வு செய்த மருத்துவர் முன்னிலையாகி தெரிவித்ததாவது:

லாரி ஏறியதால் ஏற்பட்டஎலும்பு முறிவுகள், உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயங்களே உயிரிழப்பு ஏற்படக் காரணம் என்றார். மனுதாரர் தரப்பில், எக்ஸ்ரே எடுப்பது கூடுதல் ஆவணமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பில், ஜகபர் அலியின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

 

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

புதுக்கோட்டை அரசு மருந்து வக்கல்லூரிமுதல்வர் எக்ஸ்ரே எடுப்பதற்கான கருவிகளை வழங்க வேண்டும். மருத்துவர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் இந்தக் கருவிகள் மூலம் வெள்ளிக்கிழமை (ஜன. 31) ஜகபர் அலி சடலத்தைத் தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்க வேண்டும். அந்த இடத்தில் வேறு யாரும் நுழையாதபடி தடை செய்ய வேண்டும். எக்ஸ்ரே எடுப்பதை அரசு அதிகாரிகள் விடியோ எடுக்க வேண்டும். வேறு யாரும் விடியோ எடுக்க அனுமதிக்கக் கூடாது. இந்தப் பரிசோதனையின் போது, ஏற்கெனவே கூறாய்வு செய்த மருத்துவர் உடனிருக்க வேண்டும்.

பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருமயம் வட்டாட்சியர் உடனிருக்க வேண்டும். எக்ஸ்ரே பதிவின் போது, உயிறிழந்தவரின் உறவினர் ஒருவர், தொலைவிலிருந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது என்றார் நீதிபதி.

Full Media Report



Join us for our cause