கடந்த 21.11.2023 அன்று மாநிலம் முழுவதும் செய்தித்தாள்கள், ஊடகங்கள் வாயிலாக பரவி வரும் செய்தியில், 07.11.2023 அன்று பெண் காவலர் ஒருவர், போக்ஸோ (POCSO Act) வழக்கில் பாதிக்கப்பட்ட 15 வயதான சிறுமியிடம் 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெறுவதற்காக, ஊட்டியில் உள்ள அன்னை சத்யா இல்லத்தில் இருந்து கோத்தகிரியில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட 15 வயதான சிறுமியுடன் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் இறங்கிய பெண் காவலர் சிறுமியின் கைகளில் விலங்கிட்டு, கிட்டத்தட்ட 400 மீட்டர் நடந்தவாறு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். நீதிமன்ற வாசலில் மட்டும் கை விலங்கை அகற்றி, 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் பெற்றவுடன், மீண்டும் அச்சிறுமிக்கு கை விலங்கிட்டு, பொது சாலையில் பேருந்து நிலையம் வரை நடக்க வைத்தது என்பது மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கிறது.
இந்த சம்பவம் குறித்து தாமாக முன் வந்து (Suo-Moto) இவ்வழக்கினை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அனுப்பியதோடு, மனித உரிமைகள் திருத்தச் சட்டம், 2019 பிரிவு 12 (A) இன் கீழ் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கும் தாமாக முன் வந்து (Suo-Moto) விசாரணைக்கு எடுக்குமாறு மக்கள் கண்காணிப்பகம் 25.11.2023 அன்று மனு அனுப்பிள்ளது.