for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

கந்து வட்டி கொடுமையால், தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் கடந்த அக்டோபர் மாதம் 23-ந்தேதி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாளுக்கு நாள் கந்து வட்டி புகார்கள் அதிகமாக வந்து கொண்டு இருக்கின்றன.

இதற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்பினர் இணைந்து கந்து வட்டி ஒழிப்பு கூட்டு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இயக்கம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று பொது விசாரணை நடந்தது. மும்பை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஹோல்சே பட்டேல் தலைமை தாங்கினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, கோபாலன், பெங்களூரு பேராசிரியர் பால் நியூமன், தேசிய தலித் இயக்க செயலாளர் ரமேஷ்தாசன், சென்னை ஐகோர்ட்டு வக்கீல் பிரிசில்லா பாண்டியன், பேராசிரியர் பியூலாசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் பாஸ்கரன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கந்து வட்டி தொடர்பான புகார் மனுக்களை பெற்றனர். மனுக்கள் கொடுத்த சிலர் கதறி அழுதனர்.

புளியங்குடி வ.உ.சி. தெருவை சேர்ந்த இசக்கி என்பவரின் மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 35) தனது 2 மகள்களுடன் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், நான் பீடி சுற்றி வாழ்க்கை நடத்தி வருகிறேன். தையல்காரராக வேலை செய்த எனது கணவர் ஒருவரிடம் ரூ.35 ஆயிரம் கடன் வாங்கினார். வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சம் வரை எனது கணவர் திருப்பி கொடுத்து உள்ளார். ஆனால் அவர் இன்னும் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டி வருகிறார். எனது மனுவை பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வரிசையில் நின்று மனுக்களை கொடுத்தனர். அவர்கள் கொடுத்த மனுக்களை கந்து வட்டி கூட்டு இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பெற்றுக் கொண்டு, பாதிப்புகள் பற்றி கேட்டு அறிந்தனர். இதில், கார்ட்டூனிஸ்ட் பாலா, மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் உஸ்மான்கான், முன்னாள் செயலாளர் ரசூல்மைதீன், சமூக ஆர்வலர் பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர். 





Join us for our cause