இந்தியாவில் நிகழும் பல்வேறு வகையான மனித உரிமை மீறல்கள் பற்றி, மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றிடிபேன் ஐக்கிய நாட்டவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வுக் கூட்டத்தில் பேசியுள்ளார். ‘’முக்கியமான மனித உரிமைகள் பரிந்துரைகளை இந்தியா இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான கௌரவக்குற்றங்கள், வரதட்சணை மரணங்கள் மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட 14 பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ஐ.நா-வின் சித்ரவதைக்கெதிரான உடன்படிக்கையை ஏற்புறுதிசெய்யுமாறு கூறப்பட்ட 20 பரிந்துரைகளில், 13 மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளது. மரண தண்டனைக்கு எதிரான பரிந்துரைகள் மற்றும் மனித உரிமைக் காப்பாளர்கள் உரிமை மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்த 11 பரிந்துரைகள் எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மதச் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான 16 பரிந்துரைகளில், 9 பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வகுப்புவாத மற்றும் இலக்கு தீர்மானிக்கப்பட்ட வன்முறைத் தடுப்பு மசோதாவை நிறைவேற்றவேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்தும் பரிந்துரைகள், கடந்த உலகளாவிய காலமுறை மீளாய்விலிருந்து இதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளன. நீதித்துறையின் சுதந்திரமும் சுயாட்சியும் வலுப்படுத்த முடியாத நிலையில் இருப்பது வருந்தத்தக்கது. இந்திய ராணுவப் பாதுகாப்புப்படைகள் மற்றும் துணைப் படைகளின் தாக்குதல் காரணமாக, காஷ்மீரில் இளைஞர்கள், சிறார்கள் காணாமல் போதல் மற்றும் தாக்குதலின்போது ராணுவம் மிகச் சிறிய ரகக் குண்டுகளைப் பயன்படுத்துதல் போன்றவை, மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது.’’ போன்ற விவகாரங்களைப் பேசியுள்ளார்.