வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரான ஹென்றி திபேன் பேசுகையில், ''ஆளுநர் ரவி காவல்துறையில் பணியற்றியவர், கூடுதலாக ஆளுநர் என்ற பொறுப்பில் அவர் தற்போது இருப்பதால் தடை செய்யப்பட்ட பரிசோதனை நடைபெற்றுள்ளதை அறிந்திருந்தும் பல நாட்கள் மௌனம் காத்தது வியப்பளிக்கிறது,'' என்கிறார். குழந்தைகள் மீதான உரிமை மீறல் ஏற்பட்டிருந்தால், அதை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்றும் விதிமீறல்கள் நடைபெற்ற தகவல்கள் தெரிய வந்த பிறகு, ஆளுநரின் தலையீடு இருந்திருந்தால், அதுகுறித்து அவர் விளக்குவதுதான் சரியாக இருக்கும் என்றும் கூறுகிறார் ஹென்றி. ''ஆளுநர் ரவி பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். இதேபோல, இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது, இதை இவர் எப்படிக் கையாண்டார், யார் மூலமாகக் குழந்தைகளுக்கு நீதி கிடைக்க முயன்றார் என்ற தகவலைத் தருவதுதான் சிறந்தது,'' என்கிறார் அவர்.