தர்மபுரி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி, செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால், 20 தமிழக கூலி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், 20 தமிழர்கள் படுகொலை வழக்கில் தமிழக அரசு தலையிட கோரியும், தர்மபுரி மாவட்ட மக்கள் கண்காணிப்பகம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் ஆகியவை சார்பில் பொது உரையாடல் கூட்டம் நாளை (7ம் தேதி) மாலை 6 மணிக்கு தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் நடக்கிறது. இதில், விசி தலைவர் திருமாவளவன், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர். இதற்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் மாநில குழு உறுப்பினர் செந்தில்ராஜா தலைமையில் நேற்று நடந்தது. விசி மாவட்ட செயலாளர் ஜெயந்தி, நிர்வாகிகள் வசந்த் ராமதுரை மற்றும் மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் வழக்கில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு 5 ஏக்கர் நிலமும், ஆரம்ப நிவாரணத்தொகை ₹5 லட்சமும், ஆந்திரா அரசிடம் பெற்றுத்தர வேண்டும். தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள், வாழ்வாதாரத்திற்காக அருகாமை மாநிலங்களுக்கு புலம்பெயர்வதை தடுக்க வேண்டும். நிரந்தர வளர்ச்சி திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.